சென்னை: தென்சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள வேளச்சேரி -பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, 2025 ஜூன் முதல் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

வேளச்சேரி-பரங்கிமலை மார்க்கத்தில் ஆதம்பாக்கம் வரையிலான ரயில் பாலம் மற்றும் தண்டவாளங்கள் அமைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. நிலம் எடுக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற விசாரணைகளால், இந்த சேவை தொடங்குவதில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2008ல் ரூ.495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.
சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் திட்டம் தாமதமானது. நீதிமன்றம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதை அடுத்து பறக்கும் ரயில் பாலப் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதற்கனா பாலங்கள் தண்டவாளங்கள் போடப்பட்டுள்ள நிலையில், சுமார் 75 சதவிகித பணிகள் நிறைவடைந்து இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழித்தடத்தில் வேளச்சேரியை அடுத்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. தற்போது ஆதம்பாக்கம், பரங்கிமலை வரையில் ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இதனால், இந்த வழித்தடலில், ரயில்கள் இயக்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் முடிவடைந்ததும், ஜூன் மாதத்தில், வேளச்சேரி -பரங்கிமலை இடையே ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. . இந்த தடத்தில் பாதுகாப்பு ஆணையர் குழுவினர் விரைவில் ஆய்வு நடத்தஉள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டும் இதுபோல 3 மாதத்தில் ரயில் சேவை தொடங்கும் என கூறிய தெற்கு ரயில்வே, பின்னர் வழக்குகளால், தாமதமான நிலையில், இந்த முறையாக வெற்றிகரமாக ரயில் சேவையை தொடங்க ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ரயில் சேவை தொடங்கியது, சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை வேளச்சேரி வழியாக ரயில்கள் இயக்கப்படும். இதனால், சென்னை கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.