சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கி உள்ளது. ஆனால், பொதுத்போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் மின்சார ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்கள் தமிழக போக்குவரத்து துறைஅமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தமிழகத்தில் பேருந்துகள் எப்போது இயக்கப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், அதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என கூறினார். போக்குவரத்து துறையின் அமைச்சரான கண்ணப்பன், இதுதொடர்பாக முதல்வரை ஆலோசித்துவிட்டு, கூறுகிறேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் முதல்வர் அறிவிப்பார் என கூறியது செய்தியாளர்களிடையே கிசுகிசுப்பை ஏற்படூத்தியது.
தமிழகத்தில் கொரோனா முடக்கம் காரணமாக, கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து இயங்காத நிலை தொடர்கிறது. தற்போது 27 மாவட்டங்களில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு இருப்பதால் பொதுப் போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேருந்து சேவைக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோருக்காக மட்டுமே சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் மின்சார ரயில்சேவைகள், சிறப்பு ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், செய்தியளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துத்துறைஅமைச்சர் ராஜகண்ணப்பன், பொது போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என கூறினார்.