சென்னை,

டிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ், ரஜினி அரசியலுக்கு வர இன்னும் வழி வரவில்லை என்று கூறி உள்ளார்.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு  அவருக்கு வாழ்த்து சொல்ல அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் குவிந்துள்ளனர். ஆனால் அவர் வழக்கம்போல ரசிகர்களை சந்திக்காமல் வெளியிடத்துக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை… போருக்கு தயாராக இருங்கள் என்று தனது ரசிகர்களை உசுப்பேற்றியிருந்தார்.

அதைத்தொடர்ந்து அவரது கபாலி  படமும் வெளியானது. பின்னர், தனது அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மீண்டும் தனது ரசிகர் மன்றத்தி னரை சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அதன் காரணமாக,  இன்று தனது பிறந்தநாளில் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் எஸ்கேப்பாகி விட்டார்.

இந்நிலையில், நேற்று தர்மபுரி வந்திருந்த ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இன்னும் வழி வரவில்லை என்றும்,  அவர் அரசியலுக்கு வரட்டும், அவர்  வந்தால் சந்தோஷம் என கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படம் வெளியாகும் சமயத்தில், தனது அரசியல் குறித்து ஏதாவது கருத்து தெரிவித்துவிட்டு, ரசிகர் மன்றத்தினரையும் சந்திப்பதாக நாடகமாடி, தனது படத்தை வெற்றிப்படமாக ஓட்டி விடுவதே வாடிக்கையாக உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.