சென்னை: குழந்தை தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டத்தை மீறி செயல்பட்ட யுடியுபர் இர்பான்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக  மருத்துவ கவுன்சில்அனுப்பிய நோட்டிசுக்கு சம்பந்தப்பட்ட  பெண் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த யூடியூபரான இர்பான்  தனது மனைவி   ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிரசவ சிகிச்சையின்போது அறுவை சிகிச்சை அரங்கினுள் சென்றிருந்த  இர்பான்,  அங்கு மருத்துவர்கள் அணியும் உடையை அணிந்துகொண்டு,  அங்கிருந்த மருத்துவரின் அனுமதியுடன் தாய் மற்றும் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டினார்.

இதுதொடர்பான விடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இர்பான் பதிவிட்டது பெரும் சர்ச்சையானது. சட்டத்தை மீறிய அவரது செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  இதையடுத்து அவர் வெளிநாட்டு தப்பிச்சென்றார். இர்பான் ஏற்கனவே குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், அவரை தமிழ்நாடு அரசு மன்னித்து விட்ட நிலையில், மீண்டும் அவரது சட்டத்தை மீறியல் செயல்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வந்தத.  தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், துறைரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு, மருத்துவமனை மற்றும் இர்பானுக்கு தனித்தனியே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இர்பான்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கூறியிருந்தார்.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசின் மருத்துவமனை துறையின் சார்பில், இர்பான் மற்றும் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு நிர்வாகம் அளித்த விளக்கம், ஏற்கும்படி இல்லாததால், தனியார் மருத்துவமனை அக்.24 முதல் 10 நாட்களுக்கு செயல்பட தடைவிதித்தும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவிட்டது. ஆனால் இர்பான்மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே, யூடியூபர் இர்பான், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்துக்கு கடிதம் கொடுத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசோ, காவல்துறையோ, அமைச்சரோ எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில்,  சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் மீது தமிழக மருத்துவ கவுன்சிலில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் புகார் கொடுத்திருந்த நிலையில், விளக்கம் கேட்டு பெண் மருத்துவருக்கு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் பெண் மருத்துவர், தனது விளக்கத்தை மருத்துவ கவுன்சிலில் அளித்துள்ளார்.

அதேநேரம், இர்பான் மற்றும் மருத்துவர் அளித்த விளக்கம் ஏற்கும்படி இருந்ததா என்பது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், மருத்துவ கவுன்சில் எதுவும் தெரிவிக்கவில்லை. இர்பான் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதால், அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை அதுகுறித்து விசாரிக்கக்கூட முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

சாமானிய மக்கள் சிறு தவறுகளை செய்தால் இரவோடு இரவாக கைது செய்யும் காவல்துறையும் தமிழ்நாடு அரசும், சட்டத்தை மீறி செயல்பட்ட இர்பான்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. இர்பான் மீது காவல்துறை எப்போது நடவடிக்கை எடுக்கும் என கேள்வி எழுப்பட்டு வருகிறது.