பெங்களூரு: பலாத்காரத்தை தடுக்க முடியவில்லை என்றால், அதை என்ஜாய் பண்ணுங்க என கர்நாடக சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, முன்னாள் சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரமேஷ் அருவருக்கும் வகையில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அவை விவாதத்தின்போது, சமீபத்திய மழை வெள்ள பாதிப்புகள், பயிர் சேத விவரங்கள் குறித்து பேச சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், சபாநாயகர் அதை ஏற்றுக்கொள்ளாமல் சபையை தொடர்ந்தார். உறுப்பினர்களின் தொடர் கோரிக்கையால் திணறிய சபாநயாகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, சிரித்துக்கொண்டே, “நான் எப்படிப் பட்ட சூழலில் இருக்கிறேன் என்றால், உங்களின் கோரிக்கைகளை ரசித்துக்கொண்டு ‘ஆமாம், ஆமாம்’ என்று சொல்ல வேண்டிய நிலையில்தான் இருக்கிறேன். . அவ்வளவுதான். எல்லோருக்கும் பேச நேரம் அளித்தால் சபையை எவ்வாறு நடத்துவது? என கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கே.ஆர்.ரமேஷ் குமார், “பலாத்காரம் தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, படுத்து மகிழுங்கள் (“when rape is inevitable, lie down and enjoy it) என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் இருக்கும் நிலையும் அதுதான்!” என்று சபாநாயகரிடம் கூறினார்.
முன்னாள் சட்டப்பேரவை தலைவரான ரமேஷ் எம்எல்ஏ பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசியத பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷ் எம்எல்ஏவின் பேச்சால் அதிர்ந்து போன காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்.எல்.ஏக்கள், ரமேஷ் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தின.
இதுகுறித்து பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, மூத்த மற்றும் அறிவார்ந்த சட்டமன்ற உறுப்பினரின் இந்த வகையான நடத்தைக்கு மன்னிப்பே கிடையாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு தொடர் குற்றவாளி. நான் ஒரு பெண் குழந்தையின் தந்தை, உங்கள் பொறுப்பற்ற கேவலமான நகைச்சுவையை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறினார்.
இத்தகைய அருவருப்பான மற்றும் வெட்கமற்ற நடத்தைக்காக இந்த தேசத்தின் முழுப் பெண்களிடமும், ஒவ்வொரு தாய், சகோதரி மற்றும் மகளிடமும் கர்நாடக சட்ட மன்றம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வேண்டும் நெட்சன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனசே தற்போதைய எம்எல்ஏவான ரமேஷ் கடந்த முறை சபாநாயகராக இருந்தபோது, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டமன்ற சர்ச்சைக்கு குறித்து பேசும்போது, “என் நிலைமை பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை போன்றது. கற்பழிப்பு ஒருமுறைதான் நடந்தது. அதை அப்படியே விட்டிருந்தால் கடந்து போயிருக்கும். பலாத்காரம் நடந்ததாக நீங்கள் புகார் செய்தால், குற்றவாளி சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் அது எப்படி நடந்தது என்று அவரது வழக்கறிஞர்கள் கேட்கிறார்கள். இது எப்போது நடந்தது, எத்தனை முறை? பலாத்காரம் ஒரு முறை நடக்கும் ஆனால் நீதிமன்றத்தில் 100 முறை பலாத்காரம் செய்யப்படுவீர்கள். இதுதான் என் நிலை” என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.