டில்லி:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடைசி கேபினட் கூட்டம் மார்ச் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேதிகளிலேயே, அதாவது ஏப்ரல் 24இ 25ந்தேதிகளில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
தற்போதைய 16வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 3ந்தேதி முடிவடைய உள்ளது. அதற்குள் தேர்தல் நடத்திய புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இந்த நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இதன் காரணமாக விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், ஏப்.7ந்தேதி தொடங்கி மே மாதம் 12ந்தி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக 9 கட்டங்களை நடத்தி முடிக்கப்பட்டது. அதுபோலவே இந்த தடவையும் நாடாளுமன்ற தேர்தலை 9 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற (2014ம் ஆண்டு) தேர்தல் ஏப்ரல் 24ந்தேதி நடைபெற்றது. இந்த முறையும் அதையொட்டிய தேதிகளிலேயே நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தல் முழுமையாக ஈவிஎம் எனப்படும் எலட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வாக்குப்பதிவு ஒப்புக்சீட்டு வழங்கும் இயந்திரம் போதுமானதாக இல்லாத நிலையில், முக்கிய வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரமான விவிபாட் நிறுவ தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தற்போது தேர்தல் ஆணையத்தில், கையில், 22.3 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 16.3 லட்சம் கன்ட்ரோல் யூனிட்டுகளும், 17.3 லட்சம் விவபாட் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் உள்ளது. இதைக்கொண்டு தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
அதுபோல, காஷ்மீர் சட்டமன்ற தேர்தல், தமிழகத்தில் காலியாக 21 சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தல். விரைவில் பதவிக்காலம் முடிய உள்ள ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகுதான் அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது. காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஆராய, இந்திய தேர்தல் ஆணை அதிகாரிகள் மார்ச் 4, 5ம் தேதிகளில் காஷ்மீர் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.