சென்னை,

ள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என காலக்கெடு விதிக்க கோரிய  வழக்கில், 4 வாரத்திற்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யப்பட்ட வழக்கும், இந்த ஆண்டு மே 16ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடர்பான வழக்கும் நிலுவையில் இருக்கும் நிலையில்,

உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலக்கெடு விதிக்கக்கோரி திமுக புதிய வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்  மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திமுக சார்பில் தொடரப்பட்ட புதிய வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில், அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கூட்டாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவுகள் நிறைவேற்றப்படாத தால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க காலக்கெடு விதிக்க கோரினார்.

இதற்கு பதில் அளித்த மாநில தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறியது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதே என கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் அவகாசம்  கோரப்பட்டது.  அதனை ஏற்ற நீதிபதி துரைசாமி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், நிர்வாகச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர், மாநில தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.