சென்னை: ”மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும். எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் நல்லா ஆகிடும்” என நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

 மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்றழைக்காமல், மருத்துவப் பயனாளிகள் என்றழைக்கலாம் என்றும்  தெரிவித்துள்ளார்.

சென்னை சாந்தோமில்,  ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்கிற பெயரில் சிறப்பு மருத்துவ முகாம், தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.  வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த முகாமை சென்னையில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர்  பேசியதாவது: “நகர்ப்புறத்திற்கு இணையாக கிராமப்புறங்களில் மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று கூறிய முதல்வர்,  “சில நாட்களுக்கு முன்னர் எனக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டேன். அங்கு இருந்தபோதும் கூட முக்கியமான அரசு அலுவல்களை மேற்கொண்டேன்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் பற்றி அதிகாரிகள், ஆட்சியர்கள், மக்களிடம் ஆலோசனை செய்தேன். தூத்துக்குடி வந்த பிரதமரிடம் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அளிக்க ஒப்புதல் வழங்கினேன். உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, நேற்று முன் தினம், தலைமை செயலகம் அலுவலகத்திற்கு சென்று எனது வழக்கமான பணியை தொடங்கினேன். அப்போது எனது செயலாளர்கள் வெளி நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க சொன்னார்கள். அது எல்லாம் தள்ளி வைக்க வேண்டாம்.

மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும். எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் நல்லா ஆகிடும். எனவே மக்களி பணி செய்தால், எனது உடல் நலத்தை கொடுத்துடும் என்று சொல்லி தான் இங்கு வந்து இருக்கிறேன். மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்த பிறகு, கோட்டைக்கு வெளியே நான் கலந்து கொண்டு பேசும் முதல் நிகழ்ச்சி இது.

நாட்டு மக்களின் நலன் காக்கக்கூடிய நிகழ்ச்சி. நாட்டு மக்களுடைய நலன் தான் என்னுடைய நலன். நம் ஆட்சி பொறுப்புக்கு வந்த போது, என்ன நிலை இருந்தது என்று யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். கொரோனா 2வது அலை, ஆம்பூலன்ஸ் தட்டுப்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என தமிழகம் நெருக்கடியில் தவித்து கொண்டு இருந்தது.

நான் உட்பட எல்லா அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராகவே மாறிவிட்டோம். தடுப்பூசி எல்லோரும் போடுவதை உறுதி செய்தோம். கொரோனா நேரத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்க கூடாது என்று ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 2 தவணையாக ரூ.4 ஆயிரம் கொடுத்தோம். கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி இது தான் மக்களை காக்கும் அரசு என்று நிரூபித்தோம்.

கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள் என்று சொல்லி, மருத்துவத்திற்கு ஏராளமான திட்டங்களை தொடங்கி இருக்கிறோம். எல்லோருக்கு உடலில் சின்னச்சின்ன பிரச்னைகள் இருக்கும். அதற்காக அவரை நோயாளி என்று கூறக்கூடாது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வருவோரை மருத்துவ பயனாளிகளாகவே பார்க்க வேண்டும்.

குடும்பத்தில் ஒருவரைக் கவனிப்பது போல், முகாமிற்கு வரும் மக்களை மருத்துவப் பணியாளர்கள் அக்கறையுடன் கவனிக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அப்படி நம்முடைய உடல் நலமாக இருந்தால் தான் மகிழ்ச்சி உடன் வாழ முடியும். உழைக்க முடியும், சாதிக்க முடியும்.

நம் அரசின் குறிக்கோள் நகர்ப்புறத்தில் வசதி வாய்ப்புடைய மக்கள் மருத்துவ சேவைகளைப் பெறுவதுபோல், கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகளாக என்றழைக்காமல் மருத்துவப் பயனாளிகள் என்றழைக்க வேண்டும். மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தாரை கவனித்துக் கொள்வது போல் அக்கறையுடன், பரிவுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் இந்தத் திட்டத்தை மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அவர்கள் பயன்பெற அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும். ஏனெனில், இந்தத் திட்டம் ஒருவரின் உயிரைப் பாதுகாக்கப் போகும் திட்டம்.

தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மையானதாக திகழ வேண்டும் என்பதே எனது கனவு. அவ்வாறாக மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல்நிலையை பாதுகாப்பதிலும் தமிழ்நாடு தான் முதன்மையானதாக திகழும் என்ற நம்பிக்கையோடு, நலமான வாழ்வு பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இவ்வாறு  பேசினார்.

சாதாரண தலைச்சுற்றல் காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டின் தலைசிறந்த அரசு மருத்துவமனைகள் சென்னையில் செயல்பட்டு வரும் நிலையில்,  அங்கு சேர்ந்து சிகிச்சை பெறாமல், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் மக்கள் பணிக்கு திரும்பிய நிலையில்,  மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும், மக்கள் சந்திப்புதான் எனக்கு உற்சாகம் தருகிறது என புருடா விட்டுள்ளார்,