சென்னை: பொதுவாக ஆண்டு இறுதித்தேர்வு முடிவும்போதே, கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு, பள்ளி திறப்பு தேதியும் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு, பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கிய நிலையில், இதுவரை கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால், மாணவ மாணவிகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழப்பத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், நாளை பள்ளிகள் திறப்பு தொடர்பாக தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளாராம்.. மேலும், வரும் கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிப்புகளையும் நாளை காலை அவர் வெளியிடுவார் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
முன்னதாக தமிழ்நாட்டில், 1முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு தேர்வு முடிந்து மே 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து, பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜுன் 10 முதல் 17ம் தேதி வரை துவங்கி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளிக்கல்வித்துறை முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. இதற்கு காரணம், அமைச்சர் என அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அமைச்சரின் முறையான பதில் இல்லாததால், பள்ளி திறப்பு குறித்த தேதியை அறிவிக்க முடியவில்லை என்ற கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வெயிலை காரணம் காட்டி, பள்ளிகள் திறப்பதை தாமதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில்,பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் நாளை அறிவிப்பு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.