சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?  என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் அட்டவணையை கணக்கிட்டு, அதற்கு முன்னதாக  பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட இருப்பதாகவும்,  இதுதொடர்பாக நவம்பர் 4ந்தேதி  அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ,   தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.

இதுதொடர்பாக,  வரும் நவம்பர் 4-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும்,,   அந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.  அதையடுத்து,   அன்றைய தினமே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  நடப்பு  கல்வியாண்டுக்கான (2025-2026) பொதுத் தோ்வு அட்டவணை அக்டோபா் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  நவம்பர் முதல்வாரத்தில் வெளியிட இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல், 2026ஆம் ஆண்டு  ஏப்ரல், மே மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு, அதற்கு முன்னதாக பொதுத் தோ்வு தேதிகள் முடிவு  செய்யப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.