சென்னை: மிக்ஜாம் புயல்  பாதிப்பால் சென்னையின் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில்,  தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் பெய்த அதிகனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கப்பதற்கான நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.  இருந்தாலும, பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பினாலும் இன்னும் ஒருசில பகுதிகளில் மழை நீர் வடியாமல்தான் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப்பெரிய முடக்கம் ஏற்பட்டது. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பால்-குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பல பகுதிகளில்,   சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற முடியாதபடி மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் நடந்தன. மழை வெள்ளத்தில் சிக்கிய சென்னையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை)  வரை 800 இடங்களில் தண்ணீர் வடியாமல் இருந்தது. இவற்றில் பாதி அளவுக்கு மட்டுமே தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது.  இன்று காலை நிலவரப்படி சுமார் 200 இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது.   420 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அங்கு சுமார் 42 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டு வருகிற

தண்ணீர் தேங்கி உள்ள மற்ற இடங்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஆனால் அந்த இடங்களில் தண்ணீர் அகற்றுவதில் கடும் சவாலும், சிக்கலும் நீடிக்கிறது. அங்கு இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் மீட்பு படையினரும், நிவாரண குழுவினரும் கடும் போராட்டத்தை சந்தித்து உள்ளனர்.  இன்னும் ஓரிரு நாளில் மழைநீர் முழுமையாக  அகற்றப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை  தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், பிஸ்கட், பால், பால் பவுடர், பாய், போர்வை, பழ வகைகள் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மேலும், மழை வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க பல தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதையடுத்து சென்னைக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 73977 66651 என்ற வாட்ஸஅப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதிகன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளானது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவ்வாறு தொண்டு நிறுவனங்கள் மூலம் வரப்பெறும் நிவாரணப் பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.