கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் ஞாயிறன்று ஏற்பட்ட கலவரத்துக்கு வெளியூர் நபர்களும் சந்தேகத்திற்குரிய வாட்ஸப் குழுவும் தான் காரணம் என்று சுற்றுவட்டார கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனங்கள் சில அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

13ம் தேதி அதிகாலை கனியாமூரில் உள்ள ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து அங்கு போராட்டம் நடைபெற்றது.

மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத மாணவியின் பெற்றோர் உரிய விசாரணை இன்றி உடலை வாங்க மறுத்தனர்.

இதனை பயன்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இறந்த மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று களத்தில் குதித்தனர் 15 ம் தேதி இந்த போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், போராட்டத்துக்கு வலுசேர்க்க வாட்ஸப் குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மர்ம வாட்ஸப் குழுவை செயல்படுத்தியது யார் என்று தெரியாத நிலையில், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை இந்த வாட்ஸப் குழுவில் இணைத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் மேற்கொண்ட விசாரணையில் இந்த வாட்ஸப் குழு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் தங்கள் எண்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்த விவரம் தெரியவில்லை என்றும், அந்த குழுவில் இருந்து வெளியேறினாலும் மீண்டும் அவர்கள் அதில் இணைத்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், வன்முறை நடைபெற்ற ஜூலை 17 ம் தேதி வெளியூர்களில் இருந்தும் பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் 20 முதல் 30 வயது மதிக்கத்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் கனியாமுத்தூருக்கு படையெடுத்து வந்ததாகவும் கூறினர்.

இதன் காரணமாக அக்கம்பக்கத்து கிராம மக்கள் அங்கு நடைபெற்ற போராட்டத்தை வேடிக்கை பார்க்க குவிந்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தால் கடந்த காலங்களில் தாங்கள் ஒவ்வொருவரும் எப்படி அலைக்கழிக்கப் பட்டோம் என்பதை கூட்டத்தில் இருந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பேச துவங்கிய நிலையில் அது வன்முறையாக மாறியுள்ளது.

இந்த வன்முறையை பயன்படுத்தி பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தவர்கள் யார் என்றும் பள்ளிக்கு உள்ளே சென்று கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தங்களுக்கு தெரியாது என்று அங்கிருந்த கிராம மக்கள் கூறியுள்ளனர்.

மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களைக் கொண்டு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர்களில் யாரும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று கிராம மக்கள் கூறியதாக தெரியவந்துள்ளது.

இந்த வன்முறை காரணமாக மாணவியின் மரணம் தொடர்பான தடயங்களும் ஆதாரங்களும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் மொத்த கலவரத்துக்கும் காரணமாக இருந்த வாட்ஸப் குழு குறித்த மர்மத்தை உடைக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.