டெல்லி: ஜனவரி மாதத்தில் மட்டும் 18.58 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. பிறர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ‘ரிபோர்ட்’ வசதியில் பதியப்பட்ட புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் நிறுவனமும் ஒன்று. ஆனால் சிலர் இதன்மூலம் சமுக விரோத பதிவுகளை வெளியிட்டு மக்களிடையே அமைதியின்மையை உருவாக்கி வருகின்றனர். இதுபோன்ற புகார்களை தொடர்ந்து, வாட்ஸ்அப் கணக்குகளை அந்நிறுவனம் நிக்கி வருகிறது.
அதன்படி, குறுஞ்செய்திகள் மூலம் பிறர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ‘ரிபோர்ட்’ வசதியில் பதியப்பட்ட புகார்கள் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்(2021)படி கடந்த ஜனவரி 1-லிருந்து 31 ஆம் தேதி வரை 18,58,000 கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில், 495 இந்திய கணக்குகளுக்கு எதிராக புகார்களைப் பெற்றதாகவும், அதில் 285 கணக்குகளை தடை செய்ய மேல்முறையீடு செய்யப்பட்டது, அவற்றில் 24 தடை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளதுடன், இதன் காரணமாக தனிநபர் பாதுகாப்பில் வாட்ஸ் ஆப் நிறுவனம் முன்னணியில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
இதேபோல் கூகுள் நிறுவனமும் ஜனவரி மாதம் பதிவான 33,995 புகார்களின் அடிப்படையில் சர்ச்சையான உள்ளடக்கங்களைக் கொண்ட 1 லட்சத்திற்கும் அதிகமானப் பக்கங்களை தகவல் தொழில்நுட்ப விதிகளின்(2021) படி கூகுளிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. பிறரது அடையாளங்களைப் பயன்படுத்தல், பாலியல் உள்ளடக்க கருத்துக்கள், நீதிமன்ற உத்தரவு போன்ற காரணங்களால் 1,04,285 பக்கங்கள் அகற்றப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் , அதே காலகட்டத்தில் ஆட்டோமேட்டிக் வசதி மூலம் 4,01,374 உள்ளடக்கப் பதிவுகளையும் கூகுள் நீக்கியுள்ளது.