சென்னை:

நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.

மாநிலத்தலைவர் அழகிரி, தனித்து போட்டியிடுவோம் என தீர்மானமே நிறைவேற்றவில்லை என்ற ஜகா வாங்கிய நிலையில், திருநாவுக்கரசரின் கருத்து தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக எச்.வசந்தகுமார் தேர்வு பெற்றதைத் தொடர்ந்து,  அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக நாங்குனேரி தொகுதியாக காலியாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 6ந்தேதி (செப்டம்பர்) அங்கு நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில், நாங்குனேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே  போட்டியிடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர், நாங்குனேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வில்லை என்றும், இது தொடர்பாக  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் செய்தியாகர்ளிடம் பேசிய எச்.வசந்தகுமார் எம்.பி.,  நாங்குனேரி, காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. எனவே மீண்டும் இங்கு காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. இதை எங்கள் கட்சி தலைமையிடமும், தி.மு.க. தலைமையிடமும் வலியுறுத்துவோம்.

இதை ராகுல் காந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இறுதி முடிவு எப்படி இருந்தாலும் அதை தலைவணங்கி ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்து உள்ளார்.

வசந்தகுமார் தனது மகன் விஜய்வசந்தை, நாங்குனேரி தொகுதியில் களமிறக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர்  திருநாவுக்கரசர்,  நாங்குநேரியில் போட்டியிடுவோம் என நெல்லை மாவட்ட காங். தலைவர், அவரது கருத்தை சொன்னதில் எந்த தவறும் இல்லை, இது தொடர்பாக காங். – திமுக தலைவர்கள் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள், இந்நாள் தலைவரகளின் மாறுபட்ட கருத்து தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.