டெல்லி: மே மாதத்தில் மட்டுமல்ல, செப்டம்பரிலும் மத்திய அரசை உளவு விவகாரம் தொடர்பாக எச்சரித்தோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களின் வாட்ஸ் அப் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கிறது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேல் உள்ளிட்டோர் தமது வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.
தேசிய அளவில் இந்த விவகாரம் பெரிதாக உருவெடுக்க ஆரம்பித்தது. இது குறித்து சம்மந்தப்பட்ட இந்திய அதிகாரிகளுக்கு கடந்த மே மாதமே அலர்ட் செய்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியிருந்தது. இப்போது, அடுத்த கட்டமாக மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மே மாதம் மட்டுமல்ல, செப்டம்பரிலும் மத்திய அரசுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் அலர்ட் செய்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த 121 பேரின் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக ஒரு கடிதமும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இதனிடையே, அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன், அங்கீகரிக்கப்பட்ட, உயர்மட்ட அளவில் அமைச்சக அதிகாரிகள் கலந்த பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த கூட்டங்களில் தங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு தரமானது என்ற ரீதியில் கருத்துகளை அவர்கள் முன்வைத்திருக்கின்றனர். அப்போதும் கூட, இதுமாதிரியான தனிஉரிமை மீறல்கள் குறித்து தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு தகவல்கள் கூறுகின்றன.