புதுடெல்லி: தங்களின் ஊழியர்களிடம் விருப்ப ஊதிய திட்டம் குறித்துப் பேசி, அவர்களின் விருப்பத்தை அறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களிடம் அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், ஊழியர்களுக்கு ஊதியமே கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவிப்பதன் மூலமாக, ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து சம்பளம் கொடுப்பதற்கான நிதியை மிச்சப்படுத்தலாம். இதன‍டிப்படையில், விருப்ப ஓய்வு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1.76 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 1.06 லட்சம் பேர் 50 வயதைக் கடந்தவர்கள். எனவே, ஊழியர்களில் பெரும்பான்மையோர் விருப்ப ஓய்வு பெறத்தக்கவர்கள் என்று அரசின் சார்பில் கருதப்படுகிறது.

விருப்ப ஓய்வு நடைமுறைகளுக்காக 17 ஆயிரத்து 160 கோடியை ஒதுக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, விருப்ப ஓய்வு திட்டம் குறித்து ஊழியர்களிடம் விரிவாக விளக்கி, அதுதொடர்பான நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்திடுமாறு சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளை மத்திய அரசின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.