சென்னை:

எடப்பாடியின் வெளிநாடு பயணத்தால் தமிழகத்திற்கு வரப்போகும் முதலீடு எவ்வளவு? என்ற விவரம் வெளியாகி உள்ளது.

மிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  13 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு திரும்பினார்.

அவரது வெளிநாடு பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், யாருக்கு முதலீடு ஈர்க்க செல்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் எதிர்க்கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், தனது வெளிநாடுகள் பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்னென்ன என்பது குறித்து தமிழக அரசு விவரங்களை வெளியிட்டு உள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் மாதம் 27ந்தேதி எடப்பாடி 3 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்று விட்டு 13 நாட்களை பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 10ந்தேதி சென்னை திரும்பினார்.

இதையடுத்து, முதல்வரின் வெளிநாட்டு  பயணத்தால், 8330க்கும் மேற்பட்ட முதலீடுகள் வந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதை ஏற்காத  மு.க.ஸ்டாலின் எவ்வளவு முதலீடுகள் கிடைத்தன என்ற விவரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தினார்.

இந்த நிலையில், வெளிநாடு பயணத்தில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த தமிழ்நா‌டு அரசின் முழுவிவர அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் 27 நிறுவனங்கள் சார்பில் 5 ஆயிரத்து 85 கோடி ரூபாய் முதலீடுக்கான ஒப்பந்தகளால் 24 ஆயிரத்து 720 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மாகாண அமைப்பு ரீதியான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு குடியரசில் 6 ஒப்பந்தங்கள் மூலம் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் முதலீடும், 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தால், ஐ.டி நிறுவனங்கள், லாஜிஸ்டிக் நிறுவனங்கள், மூன்று சக்கர மின்சார வாகன உற்பத்தி நிறுவனம், மின்னணு நிறுவனம், ஃபுட் பிராசஸிங் நிறுவனம், மேன்பவர் ரெக்ரூட்மென்ட் நிறுவனம் எனப் பல்வேறு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க இருப்பதாகவும்,  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக, மூன்று மாதங்களுக்குள் முறைப்படியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்  முதல்வருடன் அமெரிக்கா மற்றும் துபாய் பயணத்தில் இடம்பெற்றிருந்த  ஐ.ஏ.ஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார்.