ஆப்கானில் போட்ட குண்டை டெல்லியில் போட்டால் என்ன நடக்கும்? : ஒரு எச்சரிக்கை ரிபோர்ட்

Must read

ப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட மெகா குண்டை டெல்லியின் மையப்பகுதியில் போட்டால் என்ன ஆகும் என அணு குண்டுகள் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தும் வல்லுநர் ஒருவர் மதிப்பிட்டுக் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில், ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாம் மீது, 21 ஆயிரம் கிலோ எடை கொண்ட மெகா குண்டை வீசி அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தி உள்ளது.

இதில் அந்த முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டதுடன், சுமார் 36 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எம்.சி-130 ரக போர் விமானத்தின் மூலமாக வீசப்பட்ட இந்த பேரழிவு குண்டுக்கு, அனைத்து குண்டுகளின் தாய் என அமெரிக்க ராணுவம் பெயரிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி உள்ள பகுதியில் வீசப்பட்ட இந்தக் குண்டை டெல்லியின் மையப்பகுதியான கன்னாட் பிளேசில் வீசினால் என்ன ஆகும்? என்று நம்மை அதிரவைக்கும் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார் ஹார்வர்ட் பல்கலையில் படித்த அணு ஆயுதப் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சியாளர் (Alex Wellerstein) அலெக்ஸ் வெலர்ஸ்டின்.

என்ன நடக்கும்?

அவருடைய கணிப்பின்படி டெல்லி கன்னாட் பிளேசில் இந்த குண்டைப் போட்டால் சுமார் 2 ஆயிரத்து 50 பேர் கொல்லப்படுவதுடன், 5 ஆயிரத்து 700 பேராவது படுகாயமடைய நேரிடும் என எச்சரிக்கிறார். அன்றாடம் அப்பகுதியில் நடமாடும் மக்களின் எண்ணிக்கையை வைத்து இதனை அவர் கூறியிருக்கிறார்.

அதாவது, குண்டு வெடிக்கும் போது ஏற்படும் நெருப்பு மண்டலம் 12 மீட்டர் தொலைவு பரப்பைக் கொண்டதாக இருக்குமாம். அதனுடைய அதிர்வும் தாக்கமும் 46 மீட்டர் தொலைவுக்கு இருக்குமாம். 110 மீட்டர் வரை, குண்டு வெடிப்பால் ஏற்பட்ட தீயின் அனல் பரவ வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அந்த நேரத்தில் பிவிஆர் பிளாசாவில் ஒருவர் சினிமா பார்த்துக் கொண்டிருந்தால் அவருக்கு ஒன்றும் ஆகாது என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார் அலெக்ஸ் வெலர்ஸ்டின். அப்படி என்றால் பிவிஆர் பிளாசா குண்டு துளைக்காத கட்டடமா என்ன என்கிறீர்களா..? அப்படி இல்லை.

குண்டு வெடிக்கும் இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அந்த திரையரங்க வளாகம் இருக்கிறது. அதாவது 4 நிமிட நேர நடை தொலைவில் இருக்கிறது. எனவே குண்டுவெடிப்பால் ஏற்படும் அதிர்வோ, நெருப்பு மண்டலத்தின் தாக்கமோ அதுவரை செல்ல வாய்ப்பில்லை என்பதுதான் அவரது கணிப்பு. அதாவது, அனைத்துக் குண்டுகளின் தாயான பேரழிவுக் குண்டு போடப்பட்டால், 110 மீட்டர் சுற்றளவு வரை மட்டுமே பாதிக்கும் என்பதுதான் ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் வெலர்ஸ்டினின் கணிப்பு. இதுகுறித்து இனி நமது ராணுவத்தினரும், பாதுகாப்புத்துறையினரும் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நிச்சயமாக இருப்பார்கள். நமது நாடும், தலைநகரும் பாதுகாப்பாகவே இருக்கும் என்பதே நமது நம்பிக்கை.

More articles

Latest article