டில்லி
முத்தலாக் தடையின் மூலம் இஸ்லாமியப் பெண்கள் நலனுக்கு வழி செய்யும் அரசு மற்ற மதப் பெண்களின் நிலை குறித்து எதுவும் செய்யவில்லை என தி ஒயர் ஊடகம் செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
மோடி அரசு முத்தலாக் தடை சட்ட மசோதாவை இரு அவைகளும் அங்கீகரிக்க தேவையான முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த தடை சட்டத்தின் படி ஒரு இஸ்லாமிய ஆண் தனது மனைவியிடம் ஒரே நேரத்தில் மும்முறை தலாக் என கூறி விவாகரத்து பெறுவது சட்ட விரோதம் என்றும் அவரை இதற்காக சிறையில் அடைக்க முடியும் என உள்ளது. இந்த சட்ட மநோதாவை குறித்து ‘தி ஒயர்’ செய்தி ஊடகம் ஒரு செய்திக் கட்டுரை வெளியிடுள்ளது.
அந்த செய்திக் கட்டுரையின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு :
”கடந்த 2011 ஆம் வருடம் எடுக்கப்பட்ட மக்கள் தொகையின் படி சுமர் 23.7 லட்சம் பெண்கள் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக உள்ளது. ஆனால் அவர்கள் சட்டப்படி பிரிந்தார்களா அல்லது கணவரால் கைவிடப்பட்டனரா என்பது தெளிவாக இல்லை. இதில் சுமார் 19 லட்சம் பேர் இந்துப் பெண்கள் ஆவார்கள். சுமார் 3 லட்சம் பேர் இஸ்லாமியப் பெண்கள் ஆவார்கள்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் தடை சட்ட மசோதாவின் படி ஒரு இஸ்லாமியப் பெண் ஒரே நேரத்தில் மும்முறை தலாக் செய்வது தவறானது எனவும் அதற்காக அவர் கணவருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கலாம் எனவும் உள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு முத்தலாக் சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது.
இந்த சட்ட விரோதமான முறையினால் ஒரு இஸ்லாமியர் தனது மனைவியை மும்முறை தலாக் சொல்லி உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற முடியும். அவ்வாறு செய்பவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரும் என்பதால் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மோடி அரசு தெரிவிக்கிறது. அதே நேரத்தில் இந்த சட்டத்தினால் பெண்களுக்கு தீமைகளும் உண்டு என்பதை அரசு கவனிக்கவில்லை என தோன்றுகிறது.
ஒரு இஸ்லாமியர் தனது மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூறி வெளியேற்றுவது சட்ட விரோதம் என்பதால் தலாக் என கூறாமலே வெளியேற்ற வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி ஒரு சில மாற்று மதக் கணவர்களும் இந்த சட்டம் இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அவர்கள் மனைவிகளை மூன்று முறை தலாக் எனக் கூறி வெளியேற்றும் அபாயமும் உள்ளது. அவ்வாறு வெளியேற்றப் படும் பெண்களுக்கு இந்த சட்டத்தின் பயன் கிடைக்காது.
அதாவது ஒரு இஸ்லாமியக் கணவர் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறாமல் தன் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினாலோ கொடுமைகள் செய்தாலோ இந்த சட்டத்தின் மூலம் அந்த பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது. அவர் முத்தலாக் கூறினால் மட்டுமே அவரை சிறையில் அடைக்க முடியும். இந்த நிலையில் தான் மாற்று மதப் பெண்களும் உள்ளனர். ஆகவே மோடி அரசு சட்டத்தை வேறு விதமாக மாற்றி அமைக்க வேண்டும். இந்த விவாகரத்து சட்டம் அப்போதுதான் அனைத்து மதப் பெண்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையும்.
”குடும்ப சட்டத்தின் மூலம் விவாகரத்து பெறாமல் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்வதோ தள்ளி வைப்பதோ செல்லாது மற்றும் சட்ட விரோதம் ஆகும்.
இவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக விவாகரத்து அல்லது மனைவியை தள்ளி வைக்கும் கணவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்” என திருத்தம் செய்யப்பட வேண்டும்
அது மட்டுமின்றி மேலே குறிப்பிட்டவைகளுக்கு பொருந்தும்படி முழு மசோதாவும் திருத்தப்பட வேண்டும். இவ்வாறு மாற்றி அமைத்தால் இஸ்லாமியப் பெண்கள் மட்டுமன்றி அனைத்து மதப் பெண்களும் பயன் அடைவார்கள்”
என தி ஒயர் ஊடகம் தெரிவித்துள்ளது.