புதுடெல்லி: அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முதல் 3 பொருளாதார சக்திகளுள் ஒன்றாக இந்தியா திகழும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கல்விக்கும் மனித திறன்களுக்கும் இந்நாடு அதிகம் முதலீடு செய்ய வேண்டுமென வெள்ளை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2000 மற்றும் 2006ம் ஆண்டுகளில் தனது ஜிடிபி வளர்ச்சியை இரட்டிப்பாக்கியது போன்றே தற்போது செய்ய வேண்டும். அப்போது ஜிடிபி -யானது 476 பில்லியன் டாலர்களிலிருந்து 949 பில்லியன் டாலராக அதிகரித்தது.

இந்த காலகட்டமானது, மேலாண்மை மற்றும் பொறியியல் கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்பட்ட ஒன்றாக இருந்தது. ஜிஇஆர் எனப்படும் மொத்த சேர்க்கை விகிதமானது வரும் 2025ம் ஆண்டு 35% ஆகவும், 2035ம் ஆண்டு 50% ஆகவும் அதிகரிப்பது அவசியம். அப்போதுதான் சீனாவை ஈடுசெய்ய முடியும்.

அந்த நிலையை எட்டினாலும்கூட, அது அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் பாதியளவே. அதேபோன்று தற்போது 950 என்ற எண்ணிக்கையில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் 1200 என்பதாக அதிகரிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.