புதுடெல்லி: கிரிக்கெட்டிற்கு வெளியில் ஒரு தனி வாழ்க்கை உள்ளது என்பதை ராகுல் டிராவிட்தான் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்றுள்ளார் இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா.
புஜாரா கூறியுள்ளதாவது, “ராகுல் டிராவிட் எனக்கு எப்போதும் ஊக்கமளிப்பவராக இருக்கிறார் மற்றும் எனது சிந்தனையை, கிரிக்கெட்டிலிருந்து வெளியேக் கொண்டுவர உதவினார். அவர் எனக்கு எப்படிப்பட்டவர் என்பதை ஒரு வரியிலெல்லாம் கூறிவிட இயலாது.
கிரிக்கெட்டை ஈடுபாட்டுடன் விளையாடினாலும், அதிலிருந்து சிந்தனையை வெளிக்கொண்டு வரவும் எனக்குத் தெரியும். கிரிக்கெட்டிற்கு வெளியேயும் வாழ்க்கை உள்ளது. தொழில்நுட்பம் என்பதைத் தாண்டி, பேட்டிங் செய்வதில் வேறு விஷயங்களும் உள்ளன என்பதை டிராவிட் கற்றுக்கொடுத்தார்.
எங்களுடைய பேட்டிங் பாணியில் நீங்கள் ஒற்றுமையை உணரலாம். ஆனால், அது நான் அவரைப் பின்பற்றுவதால் உருவான அம்சம் அல்ல. சதமடிப்பதைவிட, அணியின் வெற்றிக்காக கடைசிவரை களத்தில் நிற்பதே முக்கியம் என்பதை செளராஷ்டிர அணிக்காக ஆடுகையில் அறிந்து கொண்டேன்” என்றுள்ளார் புஜாரா.