திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் சிறப்பாக பணியாற்றி நாட்டின் கவனத்தை பெரிதும் ஈர்த்தவர் பெண் உயர்அதிகாரி கர்னல் ஷோபியா குரோஷி.
இவரை பாகிஸ்தானியர்களின் சகோதரி என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார் மத்திய பிரதேச பழங்குடி நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா.

அதாவது பகல்காம் தாக்குதலில் இந்திய பெண்களின் குங்குமம் அழித்து விதவையாக்கிய பாகிஸ்தானுக்கு அவர்களின் சகோதரியை ( சோபியா குரோஷி என்ற இஸ்லாமியப் பெண்ணை) வைத்தே மோடி பாடம் கற்பித்திருக்கிறார் என்ற அர்த்தத்தில்.
நாட்டுக்காக போராடும் ராணுவ பெண் உயர் அதிகாரி இப்படி மத ரீதியாக சித்தரித்து பாஜக அமைச்சர் பேசியது பல்வேறு தரப்பு மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக இந்த விவகாரத்தை கையில் எடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு பக்கம் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு இன்னொரு பக்கம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திடம் ஓடியிருக்கிறார் பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா.
இவ்வளவு அமளி துமளிக்கிடையேயும் அவரை பதவி நீக்கம் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய பிரதேச பாஜக அரசு.
ஏற்கனவே 2013ல் முதலமைச்சர் சிவராஜ் சவுக்கானின் மனைவியை செக்ஸியாக கமெண்ட் அடித்து அதற்காக பதவி பறிக்கப்பட்டவர் தான் இந்த பாஜக அமைச்சர்.