சென்னை:
மிழகத்தில் உள்ளாட்சி தேர்தலின்போது ஓட்டு எந்திரம் பயன்படுத்த என்ன பிரச்சினை என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள  உள்ளாட்சி  தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும்,  2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகள் மறுவரையறை செய்து, சுழற்சி முறை இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்றும்,  வெளி மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க., பா.ம.க. சார்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.
vote
இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார் கூறியதாவது:
‘தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 974 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தற்போது 66 ஆயிரத்து 500 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயாராக உள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் ஒரு வாக்காளர் ஒரு ஓட்டு தான் போடுவார். அதனால், இந்த ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துவதில் சிரமம் இல்லை.
ஆனால், ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில், ஒரு வாக்காளர் 4 ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் 4 ஓட்டுகளை பதிவு செய்ய முடியாது. ஒரு ஓட்டுக்கு ஒரு எந்திரம் என்று கணக்கிட்டால், சுமார் 5 லட்சம் ஓட்டு எந்திரங்கள் தேவைப்படும்.
எனவே, இந்த உள்ளாட்சி தேர்தலில், மாநிலம் முழுவதும் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துவது என்பது சாத்தியமற்றது. அதேநேரம், சோதனை அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இந்த முறை ஓட்டு எந்திரங்களை பயன்படுத்தப்படுகிறது’ என்று கூறினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி, ‘2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், வார்டுகளை மறுவரையறை செய்வது என்பது இயலாத காரியமாகும். சட்டசபை மற்றும் பாராளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய பல ஆண்டுகள் ஆனது. அதேபோல, வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நீண்ட காலம் தேவைப்படும்.
எனவே, வார்டுகளை மறுவரையறை செய்ய முடியாது. அதேநேரம், 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மாநில அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
யாரை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என தமிழக நகராட்சி சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
மேலும், அட்வகேட் ஜெனரல் தன் வாதத்தில், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும். அக்டோபர் 24–ந்தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும்’ என்றும் கூறினார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர்,
‘உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்து தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. எனவே, இந்த பதவிகளுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டு எந்திரங்களை, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தலாம். 5 லட்சம் மின்னணு எந்திரங்கள் தேவை என்றால், அதை வழங்க அகில இந்திய தேர்தல் ஆணையமும் தயாராக உள்ளது’ என்று வாதிட்டார்கள்.1court
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:–
உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும். அதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கவேண்டும்.
வட மாநிலங்களை ஒப்பிடும் போது, தென் மாநிலங்களில் தேர்தல் வன்முறை என்பது மிகவும் குறைவாகத்தான் உள்ளது. இங்கு, ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவது, கள்ள ஓட்டு போடுவது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற நிகழ்வுகள் பெரிய அளவில் நடைபெறாது.
அதேநேரம், இந்த தேர்தலில் வெளிமாநிலங்களில் இருந்து, ஓட்டுப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து பயன்படுத்தலாமே? மேலும், இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், எத்தனை எந்திரங்கள் தேவைப்படும்? எத்தனை கட்டுப்பாட்டு எந்திரங்கள் தேவைப்படும்? இந்த எந்திரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல் என்ன? ஆகியவைகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் விளக்கமான பதில் மனுவை நாளை (இன்று) தாக்கல் செய்யவேண்டும்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.