காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கை மீண்டும் கிளறும் மர்மம் என்ன?

Must read

சென்னை:

தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வரதராஜ பெருமாள் கோவில் கணக்காளர் கணேஷ், காஞ்சிபுரத்திலுள்ள விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதின் பேரில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 2004ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். வழக்கு விசாரணையின் போது குற்றவாளி ரவி சுப்ரமணியன் அப்ரூவராக மாறி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 1875 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2009ம் ஆண்டு முதல் புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில், சங்கராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்தசர்மா, மகள் உமா மைத்ரேயி உள்ளிட்ட 371 சாட்சிகள் போலீசாரால் சேர்க்கப்பட்டனர். இதில் 187 சாட்சிகளை மட்டும் புதுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இவர்களிடம் அரசு வக்கீல் தேவதாஸ் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அப்ரூவர் ரவி சுப்ரமணியன் உள்ளிட்ட 83 பேர் பல்டி அடித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, 6 வது எதிரியாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கதிரவன் என்பவர் கடந்த மார்ச் மாதம் சென்னை கே.கே.நகரில் காரில் வரும் போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 25 பேரில் ரவி சுப்பிரமணியன் அப்ரூவர் ஆனதாலும் கதிரவன் வெட்டி கொலை செய்யப்பட்டதாலும் எஞ்சிய 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர்.

அனைவரும் விடுதலை சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி நீதிபதி முருகன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஜெயேந்திரரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பதிவு செய்யப்பட்ட அவரது வாக்குமூலத்தை ரிபப்ளிக் டிவி தற்போது வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளது.

அந்த வாக்குமூலத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி தொடர்பாக இடம்பெற்ற பேச்சு குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘இந்த வழக்கு தொடர்பாக நான் பதிவிட்ட கட்டுரை குறித்து எஸ்பி பிரேம்குமார் என்னிடம் விசாரணை மேற்கொண்டார். ஜெயேந்திரரின் வாக்குமூலத்தை பார்வையிடுமாறு என்னை அவர் கேட்டுக் கொண்டார். சுவாமி மயக்க நிலையில் கூறியிருந்ததால் அதை பார்க்க நான் மறுத்துவிட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தேவையில்லாமல் முடிந்து போன சங்கரராமன் கொலை வழக்கை கிளறி அதன் மூல் தங்களது ரேட்டிங்கை உயர்த்த ரிபப்ளிக் டிவி முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

More articles

Latest article