புதுச்சேரி:

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது,  தமிழக முதல்வருக்கும், புதச்சேரி முதல்வரும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து விளக்கினார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் அக்டோபர் 21ந்தேதி, புதுச்சேரி  காமராஜர் நகர் தொகுதியிலும் இடைத்தேரதல் நடைபெற உள்ளது. அங்கு  திமுக தலைமையிலானமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் புதுச்சேரி சென்றார்.

காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட தென்றல் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், சாமிப்பிள்ளைத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் அவருக்கு பிரமாதமான வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின்,

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கத்தை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த புதுச்சேரி மாநில மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி- தமிழகத்தில் 39 இடங்களில் மகத்தான வெற்றியை பெற்றோம்.

வருகிற 21ந் தேதி நடக்கிற காமராஜர் நகர் தொகுதியில் நடக்கக்கூடிய இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஜான்குமார் உங்களிடம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஜான்குமார் ஏற்கனவே நெல்லித்தோப்பு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் தனது பதவியை முதல்வர் நாராயணசாமிக்காக தியாகம் செய்தவர். முதல்வர் நாராயணசாமிக்காக கரம் கொடுத்த அவருக்கு காமராஜர் நகர் தொகுதி மக்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  கவர்னர் பதவி என்பதே தேவையில்லாத பதவி என்று ஏற்கனவே அண்ணா சொல்லியிருக்கிறார், ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லை என்றார் என்பதை சுட்டிக்காட்டி பேசியவர், நாட்டில், எங்கெங்கு பி.ஜே.பி ஆட்சி இல்லையோ அங்கெல்லாம் கவர்னரை வைத்து பாஜக  அரசியல் செய்கிறது, அதன்படிதான் புதுச்சேரியில் கிரண்பேடி சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார் என்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்கும் விதமாக, மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் விதமாக கிரண்பேடி நடந்து கொள்கிறார் என்றவர், மக்களுக்கு வழங்கப்படம் இலவச அரிசி, இலவச வேட்டை சேலை ஆகியவை மக்களுக்கு கிடைக்க கிரண்பேடி தடையாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

புதுவை மாநிலத்தில் புரட்சிகரமான முதல்வர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், ஆனால், தமிழகத் தில் பாரதிய ஜனதா கட்சி அதாவது மத்திய அரசு ஆட்சி செய்து செய்துகொண்டிருக்கிறது என்று கூறியவர்,

தமிழக முதல்வர் சாதாரண முதல்வர் அல்ல. அடிமை முதல்வர். கைக்கட்டி வாய் பொத்தி அடிமை ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் இருப்பது அடிமை ஆட்சி. எடுபிடி ஆட்சி. மாநில உரிமை பறிக்கப்பட்டாலும் தட்டி கேட்பதில்லை. தமிழக ஆளுநர் செய்யும் அராஜகத்தை தட்டி கேட்கும் தைரியமில்லை.

புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து போராடுகிறார். ஒரு மாநில முதல்வர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

என்று இரு முதல்வர்களையும் ஒப்பிட்டு பேசினார். இவற்றை சிந்தித்து பார்த்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெறும் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

What is the difference between and  Stalin said in