டில்லி,
உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்தியாவிலும் மரண தண்டனைக்கு எதிராக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தூக்கு மூலம் மரண தண்டனை நிறைவேற்றும் முறைக்கு மாற்று தண்டனை என்ன என்பது குறித்து தெரிவிக்கு மாறு மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் முறையை ஒழிக்குமாறு உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் உயிரைக் துன்புறுத்தாமல் பறிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் வலியுறுத்தி உள்ளது. ஆகவே அதை பின்பற்றியே தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே பல தீர்ப்புகளில் தூக்க தண்டனையை கோர்ட்டுகளே விமர்சித்துள்ள நிலையில், தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்று முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பபட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மரண தண்டனைக் கைதிகளை தூக்கிலிட்டுக் கொல்லும் முறைக்கு மாற்று என்ன? என்பது குறித்து தெரிவிக்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.