சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா, நிரந்தரமானதா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பி, இதுகுறித்து முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார் டிவிட் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு மற்ற இனத்தவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், இந்த உள்ஒதுக்கீடு தற்காலிகமானது என தமிழக அமைச்சர்களும் அவர்கள் வாக்கு சேகரிக்கும் பகுதிகளுக்கு ஏற்றவாறு கூறி வருகின்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பதில் தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். இதனை முதல்வர் தெளிவுப்படுத்தி இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சசர் ப.சிதம்பரம், அதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்வர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை. இல்லையில்லை, 10.5 சதவீதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு. மேலும் முதல்வர் என்ன சொல்லப்போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பா.ஜ., என்ன சொல்லப் போகிறது?.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.