சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் மிகவும் நெருங்கி வந்துள்ள சூழலில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பேட்டி பெரியளவிலான விவாதங்களை கிளப்பியுள்ளது.
தனது பேட்டியில், அவர், கட்சிக்கு தான்தான் தலைமை என்பதை வலியுறுத்தியிருப்பதோடு, வேறுபல விஷயங்களையும் கோடிட்டு காட்டியுள்ளார்.
அதேசமயம், அவர் சசிகலா மற்றும் தினகரன் குறித்து கூறியுள்ள நேர்மறை கருத்துகள்தான் தற்போது வேறுவிதமான விவாதங்களை கிளப்பியுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய சூழலுக்கான வியூகங்களை இப்போதே அவர் வெளிப்படுத்துகிறார் என்பது உள்ளிட்ட பலவிதமான கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால், எது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தற்போது, அமமுக போட்டியால், தென்மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுகவினருக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் பன்னீர் செல்வமும் பெரியளவில் சிக்கியுள்ளார்.
எனவே, தனது பேட்டியின் மூலம் பலவிதமான திட்டங்களை ஓபிஎஸ் வெளிப்படுத்தினாலும், அவரின் முதல் நோக்கம், அமமுகவால் பிளவுபடும் அதிமுக வாக்குகளை மட்டுப்படுத்தி, முடிந்தால் அவற்றை தனக்கு சாதகமாக திருப்ப வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
சசிகலா குறித்து கட்சிக்குள் பெரிய எதிர்மறை கருத்துகள் தெரிவிக்கப்பட்டபோது, அமைதியாக இருந்த ஓபிஎஸ், இப்போது கடைசி நேரத்தில் கொடி பிடிப்பது, அவர் எதிர்பார்க்கும் விளைவை நிச்சயம் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்!