சென்னை: ஆலந்தூரில் 20 பேர் கொண்ட ரவுடிகும்பல் பொதுமக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதுடன், 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடிகளின் அட்டகாசத்தால்,  பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய நிலையில், ரவுடி  கும்பலை போலீசார் தேடி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், போதைப்பொருட்கள் விற்பனை, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து போன்றை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், டிஜிபியோ, கஞ்சாவேட்டை, ரவுடி வேட்டை என்று கூறி, இத்தனை பேரை பிடித்தோம், இத்தனை கோடி பறிமுதல் என்று கூறி வருகிறார்களே தவிர ரவுடியிசமும், கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருட்கள் விற்பனை ஜரூராகவே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் சென்னை உள்பட மாநிலம் முழுவதும், ஆப்ரேசன் மின்னல் ரவுடி வேட்டை என்கிற பெயரில் போலீசார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்ததாக அறிவிக்கப்பட்டது.  72 மணிநேரத்தில் 3,095 ரவுடிகள் கைது என தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமிழகத்தின் தலை நகரான சென்னையில் நேற்று  இரவு 20 பேர் கொண்ட ரவுடி கும்பல் பொதுமக்களை தாக்கியும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் அராஜகத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் நேற்று  இரவு 9 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் கையில் பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தெருவில் நின்று கொண்டிருந்தவர்களை மிரட்டி உள்ளனர். மேலும்  தெருவோரம் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதுடன், நவீன்(31), ஷபீக்(22), அபுபக்கர்(19), ஆகிய மூன்று பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது.  பின்னர் அந்த தெருவில் கடைசி பகுதிக்கு சென்று அங்கு பெட்ரோல் வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். .

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த  பரங்கிமலை துணை ஆணையர், அடையார் துணை ஆணையர், மடிப்பாக்கம் உதவி ஆணையர், உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர்.  தலையில் வெட்டுக்காயமடைந்த இளைஞர் மூவரையும் கிண்டி கத்திபாரா அருகில் உள்ள தனியார் மருத்துவமமையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர்.  இதில் நவீன் மற்றும் அபுபக்கர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஷபீக் மட்டும் மேல் சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பொதுமக்களை அச்சுறுத்தி ரவுடி கும்பல் யார் யார் என்பது குறித்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துஆய்வு செய்து வருகின்றனர்.