“இந்தி மட்டும் தெரியலனா..” நெஞ்ச நக்குற கோஷ்டிக்காக ..

சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

ஒரு மொழியை சரளமாக பேச அந்த மொழியை முதலில் கட்டாயம் எழுத, படிக்க வேண்டும் என்பதே அபத்தம்..

அதெல்லாம் ஒரு எழவு முழு பலனையும் தராது..

கண்ணுக்குத் தெரிந்த உதாரணம் ஒன்று சொல்கிறோம். நீங்களே சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு முழுக்க ஏராளமான மாணவ மாணவியர் கட்டணம் செலுத்தி ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் இந்தி கற்கின்றனர்..

ஆரம்பம் முதலே இந்தி வகுப்பு உள்ளது என்று பெருமையாக சொல்லி படிக்கும் அவர்களில் எத்தனை பேருக்கு சரளமாக இந்தி பேச வருகிறது என்று கேட்டுப்பாருங்கள்.

அவ்வளவு ஏன், தனியார் பள்ளிகளில் இந்தி டீச்சர்களுக்கே சரளமாக இந்தி பேச வருகிறதா என்று போய் பாருங்கள்.

போர்டில் எழுதிப்போடுவார்கள், படிப்பார்கள், இலக்கண ரீதியாக விளக்கம் சொல்வார்கள், அவ்வளவுதான்.

இங்கிலீஷை சிலர் பேசும்போது written type-ல் எப்படி பேசுகிறார்களோ அதே மாதிரிதான் இந்தி டீச்சர்களும் இந்தியை பேசுவார்கள்.

ஒரு மொழியின் எழுத்து வடிவம் எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் காதால் கேட்டு திரும்ப பேசும்போதுதான் அந்த மொழி சரளமாக வசப்படும்.

தமிழ்நாட்டில் தெலுங்கை தாய்மொழியாக கொண்டு பேசும் மக்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெலுங்கு எழுதப் படிக்கவே வராது. அவ்வளவு ஏன் அவர்களின் பெயர்கள் கூட தெலுங்கில் எப்படி இருக்கும் என்பது தெரியாது..

இதைவிட புரிகிற மாதிரி இன்னும் ஒரு உதாரணத்தை சொல்கிறோம்.

பள்ளிகளின் சேர்ப்பதற்கு முன் நம் வீட்டில் குழந்தைகள் தமிழில் சரளமாக நம்மிடம் வாயாடும். ஆனால் அந்த குழந்தைகளுக்கு அ ஆ இ ஈ எப்படி இருக்கும் என்பது கூட தெரியாது.

எல்லாமே காதால் கேட்டதை திரும்பத் திரும்ப பேசுவதால் வரும் பழக்கம் அவ்வளவுதான்.

இந்தியும் அப்படித்தான். பிழைக்கப் போகும் இடத்தில் அந்த மொழி கட்டாயம் என்றால் அவன் நாளடைவில் தானாக கற்றுக் கொள்ளப் போகிறான்..

உலகில் சுமார் 200 நாடுகள் இருக்கின்றன. இவற்றில் பல நூறு மொழிகள் பேசப்படுகின்றன.. இங்கிலீஷை தாண்டி உலகம் முழுவதும் எந்தெந்த நாடுகளுக்கோ இடம்பெயருகிற வர்கள் அந்தந்த நாட்டின் மொழியை நாளடைவில் கற்றுக் கொள்கின்றனர்..

அந்த நாட்டின் மொழியை கற்றுக் கொண்டுதான் நுழைவோம் என்று யாரும் சபதம் போட்டு காத்திருப்பதில்லை..

அப்படிப்பட்ட நிலையில் ஹிந்தி கற்றுக் கொண்டால் அகில உலகத்தை ஆட்டிப்படைக்கலாம் என்பதெல்லாம் மூளை என்பது என்றே ஒன்று இல்லாமல் பிறந்து விட்டவர்களின் பிதற்றலாக இருக்கலாம்..

ஏன்பா இப்படி அக்கப்போர் பண்ணுகிறீர்கள் என்று கேட்டால் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று பச்சையாக பொய் சொல்கிறார்கள்.

இந்தி என்பது என்பது இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பது தான் சட்டபூர்வமான உண்மை. ஹிந்தி என்பது மத்திய அரசு அலுவல் ரீதியான தொடர்பு மொழிகளில் முதன்மையானது அவ்வளவுதான்.

நாட்டில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்ற வரிசை வரும்போது இந்திதான் முதலிடம். அதை மறுப்பதற்கு இல்லை.

வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் வாரிசுகளுக்கு பங்கீடு என்று வரும்போது முன்பாகம் பின் பாகம் நடு பாகம் என்று வித்தியாசப்படலாமே தவிர பெரியவனாக பிறந்தவனுக்கு பெரிய பாகம் கடைக்குட்டி ஆக பிறந்தவனுக்கு தம்மா துண்டு பாகம் என்று சொல்லிவிட முடியாது.

முதலில் இந்தியா என்பது ஒரே ஒரு மொழி மட்டுமே பேசக்கூடிய, நாடு அல்ல.

பல்வேறு தாய் மொழிகளைக் கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழும் ஒரு துணைக்கண்டம்.

ஒரே நாடு என்று சொல்வதும் ஒரே மொழி என்று நிலை நிறுத்துவதும் பேராபத்தில்தான் போய் முடியும்..

இது தொழில்நுட்ப புரட்சி வேகமாக வளர்ந்திட்ட காலம்.இன்னும் வளர்ந்து கொண்டே போகிறது.

மாய்ந்து மாய்த்து டைப்ரேட்டிங் அடிப்பது போய் இன்று வாய்ஸ் மெசேஜில் பக்கம் பக்கமாக மின்னல் வேகத்தில் எழுத முடிகிறது.

காலண்டர்,கால்குலேட்டர், கடிகாரம், டைரி,டார்ச் லைட், சாதா கேமரா வீடியோ கேமரா கேமரா வி.சி.பி, விசிஆர் என ஒரு சாதாரண ஆண்ட்ராய்டு போனில் 150 க்கு மேற்பட்ட சாதனங்கள் அடங்கிப் போய்விட்டன..

சில நூறு மொழிகளுக்கும் இப்படிப்பட்ட நிலைமைதான். கற்பிப்பது, மொழிபெயர்ப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் மனிதா ஆற்றல் தேவைப்படாமல் செயற்கை நுண்ணறிவிடம் (AI) போய்க்கொண்டிருக்கின்றன..

உலகின் ஏதோ ஒரு நாட்டின் மொழியில் சினிமா படம் எடுத்தால், உலகின் அத்தனை மொழிகளிலும் அந்தப் படத்தை சில மணி நேரங்களில் என்ற அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி வந்து விட்டது..

ஒரு காலத்தில் ஹாலிவுட்டில் இங்கிலீஷில் பேசிய ஜேம்ஸ் பாண்ட் சென்னையில், ரிலீஸ் ஆகி பேச இரண்டு ஆண்டுகள் ஆகும்

இன்று உலகம் முழுதும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ஒரே ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் பேசுகிறார் ஜேம்ஸ்பாண்ட்.

இன்னும் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்.. அதெல்லாம் எதற்கு? விஷயத்திற்கு வருவோம்.

இன்று இன்னொரு மொழியை கற்பதில் என்ன தவறு, அரசின் செலவிலேயே இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்று ஆசை வலை விரிப்பார்கள் அடுத்த கட்டமாக திணிக்கவும் செய்வார்கள்..

ஒரு கட்டத்தில்,”எல்லோருக்கும் தான் இந்தி தெரியுமே அதன் பிறகு எதற்கு இங்கிலீஷ்?” என்று சொல்லி எல்லாவற்றையும் ஹிந்தியில் மட்டுமே சொல்வார்கள். தேர்வுகளில் இங்கிலீஷ் காணாமல் போய் ஹிந்தி மட்டுமே இருக்கும்..

இங்கே என்ன ஒரு கொடுமை என்றால், இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அவர்கள் அவர்கள் மொழியில் எல்லாவற்றையும் சுலபமாக அணுகி விடுவார்கள். தேர்வுகளையும் எழுதி விடுவார்கள்..

ஆனால் அவர்களுடன் போராடுகிறவன் தாய் மொழியை கைவிட்டு விட்டு இன்னொரு மொழியை கற்றுக் கொண்டுதான் போராட வேண்டும்..

அதாவது வடநாட்டவர்கள் ஹிந்தியில் எழுதுவார்கள். மற்ற மாநிலத்தவர், வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் இங்கிலீஷ் கற்றிருந்தாலும் கூடுதலாக இந்தியும் கற்றுக் கொண்டு அவர்களோடு இந்தியில் எழுதுவார்கள்..

எக்காரணம் கொண்டும் இந்திவாலாக்கள் இங்கிலீஷை படிக்கவே பேசவோ எழுதவோ மாட்டார்கள்.

உனக்கு தாய்மொழி அப்புறம் இங்கிலீஷ்னு ரெண்டு மொழி தெரிஞ்சாலும் மூணாவதா என் மொழியை நீ தெரிஞ்சிகிட்டுதான் ஆகணும்..

அப்பதான் மூணு மொழி தெரிந்த நீயும் ஒரே ஒரு மொழி தெரிந்த நானும் சமமாய் ஆவோம். புரிஞ்சுதா?

இந்தி மூளைன்னா சும்மாவா?