தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துள்ள நிலையில், அவர் மீதப சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும் திமுகவும் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், இந்த வழக்கின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனிடம் கேட்டோம். அவர்,  “வழக்கு விசாரணை முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. தீர்ப்புதான் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நீதிபதிகள் ஓய்வு பெறும் முன்பு தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே நிச்சயமாக தீர்ப்பு அளிக்கப்படும்.  இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டால் அத்தோடு அந்த பிரச்சினை தீர்ந்துவிடும்.
அப்படி இன்றி, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால்… அதாவது ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைத்தால் நிலைமை வேறு மாதிரி ஆகும்.
மறைந்துவிட்ட ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுக்க முடியாது என்றபோதிலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்” என்றார்.