சென்னை:
மலேசியாவுக்கு சென்ற ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அந்நாட்டு விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆபத்தான மனிதர்கள் பட்டியலில் அவர் பெயர் இருப்பதா கூறி மலேசியாவிற்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இந்தியா திரும்பிய அவர் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘மலேசியாவில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் இராமசாமி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதற்கு அவர் அழைப்பிதழ் அனுப்பியதோடு மட்டும் அல்லாமல், தனிப்பட்ட முறையில் எனக்குக் கடிதமும் அனுப்பி இருந்தார்.
பாஸ்போர்ட் வாங்குவதற்காகத்தான் நான் நீதிமன்றம் சென்று வந்தேன். நீதிமன்ற அனுமதியின் பேரில் சென்னை மண்டல பாஸ்போர்ட்அலுவலகம் எனக்குப் புதிய பாஸ்போர்ட் வழங்கியது. அதை வைத்துக் கொண்டுதான் சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்தேன். அவர்களும் கடந்த வாரமே எனக்கு விசா வழங்கி விட்டார்கள்.
வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்கள். இன்றைக்கு இது நல்ல அனுபவம். வீட்டில் சாப்பிட்டுவிட்டுச் சென்றது தான். 24 மணி நேரம் ஆகின்றது. இதுவரை வேறு எதுவும் நான் சாப்பிடவில்லை. அதனால் என்னுடைய செயலாளர் அருணகிரியும் எதுவும் சாப்பிடவில்லை.
நான் கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தின் குடிவரவு பிரிவுக்குச் சென்று எனது பயண ஆவணங்களைக் கொடுத்தேன். பெயரைத்தான் பார்த்தார்கள். பின்னர் பக்கத்து அறையில் இருந்த உயர் அதிகாரிகளிடம் என்னை அழைத்துச் சென்றார்கள்.
அவர்கள் என்னிடம் நீங்கள் இலங்கைத் தமிழரா? என்று கேட்டார்கள். இல்லை. நான் இந்தியாவில் உள்ள ஒரு தமிழன். இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன் என்று சொல்லி அதற்கான அடையாள அட்டையைக் காட்டினேன்.
உங்கள் மீது பல வழக்குகள் இருக்கின்றன. அதனால் உங்களை அனுமதிக்க முடியாது என்றார்கள். நான் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முறைப்படி சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்து அனுமதி பெற்று வந்துள்ளேன் என்று சொல்லி, திருமண அழைப்பிதழ், பினாங்கு மாநிலத் துணைப்பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு வந்த அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காட்டினேன். இதற்கு முன்பு 2014, 2015ம் ஆண்டுகளில் கோலாலம்பூருக்கு வந்துதான் பினாங்குக்குச் சென்று வந்தேன் என்ற விவரங்களை எல்லாம் கூறினேன். அவர்கள் கேட்பதாக இலலை.
அதன்பிறகு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களிடம் தொடர்புகொண்டு சொன்னேன். அவர் மிகவும் கவலைப்பட்டார். எனக்கு அனுமதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் யங் அவர்கள், மலேசியத் துணைப் பிரதமரிடம் பேசினார்.
சிறிது நேரம் கழித்து அவர் என்னைத் தொடர்புகொண்டு உங்களால் மலேசியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறுகிறார்கள். நாங்கள் அனைத்து முயற்சிகளும் செய்து பார்க்கிறோம் என்றார். காலை 11 மணி அளவில் குடிவரவு அதிகாரிகள் என்னிடம், மலேசியாவுக்குள் நுழைவதற்கு உங்களுக்கு அனுமதி கிடையாது என்று துணைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் உத்தரவு வந்துவிட்டது. எனவே, நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றார்.
அதன்பிறகு என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டார்கள். விமான நிலையத்தில் உணவகங்கள் இருக்கின்றன. 11.30 மணி ஆகிவிட்டது. ஏதாவது சாப்பிடலாமா என்று நினைத்தால், நீங்கள் இங்கிருந்து எங்கும் செல்லக்கூடாது. உங்கள் செயலாளர் வேண்டுமென்றால் போய் வாங்கிக்கொண்டு வரட்டும் என்றார்கள். இப்படி அவர்கள் என்னை ஒரு கைதி போன்று வைத்ததால், எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
அதிகாரிகளை நான் குறைசொல்லவில்லை. அங்கு இருந்த பெண் அதிகாரிகள் மிகவும் அன்பாகத்தான் பேசினார்கள். மேலிடத்தில் இருந்து உத்தரவு. நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றார்கள். காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 16 மணி நேரம் ஒரே இடத்திலேயே உட்கார்ந்து இருந்தேன். சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. அவர்களும் எதுவும் கேட்கவில்லை.
இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். எனக்காக பினாங்கு முதல்வர், துணை முதல்வர் எல்லாம் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரிந்த பிறகும் கூட என்னை அங்கிருந்து அசைய விடவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால், 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசு ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்ததை நான் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு இருந்தேன்.
அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதரக அதிகாரியாக அம்சா இருந்தார். அவர் தற்போது பிரிட்டனில் இருக்கிறார். அவர் என்னைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து, அனைத்து நாட்டு தூதரக அலுவலகங்களுக்கும் ஒரு அறிக்கை அனுப்பினார். என் மகளைப் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு விசா வாங்கச் சென்றபோது, உங்களுக்கு விசா தர முடியாது; நீங்கள் தடை செய்யப்பட்ட அமைப்பில் இருக்கின்றீர்கள் என்றார்கள்.
நான் அந்த அமைப்பின் உறுப்பினர் அல்ல. ஆதரவாளன் என்று சொன்னேன். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
பிறகு நான் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது, என்னைத் தனியாக அழைத்து இரண்டு மணி நேரம் விளக்கம் கேட்டார்கள்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டுத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்கள். அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். ஒன்று மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகின்றேன். ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தது மட்டும்அல்ல, அதைப்பற்றிப் பன்னாட்டு அரங்குகளில் எங்கும் பேச விடக் கூடாது என்று இலங்கை அரசு நினைக்கின்றது. வெளிநாடுகளில் பேசக்கூடாது. குறிப்பாக, சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதற்காப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் பிரஸ்ஸல்ஸ்நகரில் பேசியதுதான் முதல் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.