கொச்சி/புதுடெல்லி:

கொச்சியிலிருந்து படகில் வெளிநாட்டுக்கு சென்றபோது நடுக்கடலில் மாயமான 243 பேர் குறித்து 5 மாதங்கள் ஆகியும் தகவல் தெரியவில்லை.


கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 243 பேரை ஏற்றிக் கொண்டு மீன்பிடி படகு ஒன்று சென்றது.

இவர்களில் பெரும்பாலோர் புதுடெல்லியிலிருந்து சென்ற இலங்கைத் தமிழர்கள். படகில் சென்றவர்களில் பெண்களும், குழந்தைகளும் ஏராளமானோர் இருந்தனர்.

இந்த படகு நடுக்கடலில் திடீரென காணாமல் போனது. 5 மாதங்களாகியும் கேரள போலீஸ், கடலோர காவல் படை, கப்பற்படை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. கடைசி வரை தேடிப்பார்த்துவிட்டு இந்த குழுவும் வெறும் கையுடன் திரும்பிவிட்டது.

இந்த விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கிய எர்ணாகுளம் கூடுதல் எஸ்பி எம்ஜே.ஸோஜன் கூறும்போது, தலா ரூ.3 படகில் சென்றுள்ளனர்.
அவர்கள் எங்கே சென்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை. கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்துள்ளோம். காணாமல் போனவர்கள் அதே படகில் மீண்டும் திரும்பி வரவும் வாய்ப்புள்ளது என்றார்.

படகில் சென்று மாயமானவர்களில் 180 பேர் இலங்கை தமிழர்கள். இவர்களில் பெரும்பாலோர் படிப்பறிவு இல்லாதவர்கள்.

இது குறித்து அவர்களது உறவினர்கள் கூறும்போது, இன்னும் சிலரது போன்களின் மணி அடிக்கிறது. அதை வைத்து அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம் என்றனர்.
உறவினர்கள் மாயமானது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழனன்று புதுடெல்லி இந்தியா கேட் பகுதியில் கூடிய உறவினர்கள், மாயமானவர்களை மீட்டுத் தருமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, படகில் சென்று மாயமானவர்கள் குறித்து துப்பு கிடைக்காதது மாநில மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

படகில் செல்லும் முன், ஒரு வாரம் கடற்கரையோரம் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். பலர் தங்களிடம் இருந்த நகைகளை விற்று ரூ.10 லட்சத்துக்கு டீசல் வாங்கியுள்ளனர் என்றார்.

இதுபோன்று திருட்டு படகில் செல்வது சட்டப்படி குற்றம் என்றோ, ஆபத்து என்றோ அறியாமலேயே பலர் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.