சென்ன‍ை: மீனவர்கள் நல்வாழ்விற்காக மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.300 கோடி நிதியைப் பற்றி விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இலங்கை கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அமல்படுத்தக்கோரி, மீனவர் நல அமைப்பு ஒன்று சென்ன‍ை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.300 கோடியை மத்திய அரசு வழங்கி இருப்பதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசிடம் பெற்ற நிதி விபரங்கள், மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்வதாக, சிறப்பு பிளீடர் போத்திராஜ் கூறினார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மத்திய அரசிடம் பெற்ற நிதி விபரங்கள், மாநில அரசு செலவு செய்த தொகை, மீனவர்களின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகையின் அளவு, எத்தனை மீனவர்கள் அடையாளம் காணப்பட்டனர் போன்ற விபரங்களை மீன்வளத்துறை வழங்க வேண்டும்.

மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ரூ.300 கோடி வழங்கப்பட்டதற்கான விபரங்கள் தெளிவாக இடம் பெறவில்லை. எனவே, மத்திய அரசிடம் இருந்து எப்போது நிதி பெறப்பட்டது; அந்தத் தொகை எப்படி செலவு செய்யப்பட்டது உள்ளிட்ட விபரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும். வரும் 16ம் தேதி தமிழக மீன்வளத்துறை இயக்குனர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என்றுள்ளனர்.