நெட்டிசன்:

காசிவிசுவநாதன் அவர்களின் முகநூல் பதிவு:

கேரளாவில் தலித்கள் 6 பேர் உள்பட பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதையடுத்து, இந்தக் கோரிக்கையை முதன் முதலில் முன்னெடுத்த தமிழ்நாட்டில் இது ஏன் நடக்கவில்லை என்று தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.

ஜாதி பேதங்களைக் கடந்து, தகுதியின் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிப்பது என்ற விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு சின்ன டைம்லைன். இதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் இரண்டு பேர்; ஒருவர் பெரியார், இன்னொருவர் மு. கருணாநிதி.

1. அனைத்து ஜாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிய பெரியார், இதற்கான கிளர்ச்சி 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று நடக்குமென அறிவித்தார்.
“இந்த கர்ப்பகிரகம் என்ற பூச்சாண்டிகள் பார்ப்பனரல்லாத மக்களை இழிமக்கள், இழிபிறப்பாளர்கள் என்றாக்கப்படுவதற்காகத்தான் இருந்துவருகிறதேயல்லாமல், மற்றபடி வேறு எந்த புனிதத் தன்மையையும் பாதுகாக்கவல்லதல்ல என்பதே நமது கருத்து” (விடுதலை – 19.10.1969) என்று குறிப்பிட்டார் பெரியார்.

தமிழகத்தின் முக்கியமான கோவில்களில் இந்தப் போராட்டம் நடக்குமென்றும் திருநீறு பூசித்தான் கோவில்களில் நுழையலாமென்றால் தொண்டர்கள் பூசிக்கொள்ளலாம் என்றும் பெரியார் கூறினார்.

2. இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

3. எல்லோரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் இந்தச் சட்டம், ஏற்கனவே இருந்த இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தச் சட்டம்தான். இதற்கான மசோதா 2.12.1970ல் தமிழக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் முக்கிய கூறு, இந்துக் கோவில்களின் எல்லாப் பகுதிகளின் நியமனத்திலும் பாரம்பரிய கொள்கையை நீக்குவது (பிரிவு55ல் செய்யப்பட்ட திருத்தம்). பிற பிரிவுகளில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, சமய நிறுவன ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல், தகுதிகள் ஆகியவை குறித்தது. (இணைப்பு பார்க்க)

4. இந்தச் சட்டத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எம். சிக்ரி, ஏ.என். குரோவர், ஏ.என். ரே, டி.ஜி. பாலேகர், எம்.எச். பெக் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து 1972 மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். அதன்படி, இந்தச் சட்டம் அரசியல் சாஸனம் அளிக்கும் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை மீறுவதாக கூறியது. ஒரு கோவிலில் அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, ஆகமங்களை மீறி அறங்காவலர் நியமனங்களை மேற்கொள்ள மாட்டார் என்று அரசு கூறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குறிப்பிட்ட இனம், உட்பிரிவு, குழுவிலிருந்தே அர்ச்சகரை நியமிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியது. ஆனாலும் மனுதாரரின் அச்சத்திற்கு இப்போது அவசியமில்லை என்று கூறி சேஷம்மாளின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

சட்டத்தை எதிர்த்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தோன்றினாலும் ஆகமத்திற்கு உட்பட்டே நியமனங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த உத்தரவு வலியுறுத்தியது.
(https://indiankanoon.org/doc/641343/)

5. இந்த நீதிமன்ற உத்தரவை பெரியார் கடுமையாக விமர்சித்தார். 1973 டிசம்பர் 8-9ல் பெரியார் திடலில் நடந்த தமிழர் சமுதாய இழிவு மாநாட்டில் பேசிய பெரியார், நண்பர் கருணாநிதி கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என்று ஆக்கியதால் ஆத்திரம் அதிகமாவிட்டதாகக் குறிப்பிட்டார்.

6. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அரசியல் சாஸனப் பிரிவு 25ஐப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்குவதற்கு ஏதுவாக அந்தப் பிரிவை நீக்க வேண்டுமென கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த ஆரம்பித்தார். பிரதமருக்கு கடிதங்களை எழுதினார். பிரிவு திருத்தப்படவில்லை. 1975ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

7. அடுத்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். 1982ல் நீதியரசர் மகாராஜன் தலைமையில் கோவில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவும் அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சிக்குப் பிறகு அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்று கூறியது. ஆனால், அதற்கு முன்பாக அரசியல் சாஸன சட்டப்பிரிவு 25 -2ல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.

8. இந்த குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு இது பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது தவிர, வேறு எதையும் எம்.ஜி.ஆர் செய்யவில்லை.

9. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா (1991) ஆகியோர் வேதாகம பயிற்சிப் பள்ளி துவங்கப்படும் என்று அறிவித்தார்களே தவிர, அப்படி எதையும் திறக்கவில்லை.

10. இதற்குப் பிறகு, 2006ஆம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அரசாணையை வெளியிட்டது. பார்க்க இணைப்பு.

11. 1996ல் ஒரு முறை ஆட்சிக்கு வந்த தி.மு.க., அப்போதே இதைச் செய்யாமல் 2006ல் செய்தது ஏன் எனக் கேட்கலாம். அந்த காலகட்டத்தில், அரசியல் சாஸன சட்டத்தை திருத்தாமல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்ற முடியாது என தமிழக அரசு நினைத்தது. முந்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மகாராஜன் குழு அறிக்கை, அதனை ஆராய அமைக்கப்பட்ட கிருஷ்ண ரெட்டியார் அறிக்கை ஆகியவை இதே வலியுறுத்தியிருந்தன. ஆனால், 2002ல் ஆதித்யன் Vs கேரள அரசு என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதின்றம், ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் எல்லோரும் சமம் என்ற இந்திய அரசியல் சாஸனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்டரீதியாக செல்லாது என்று கூறி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க முடியும் என்று தீர்ப்பளித்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா ஏதும் செய்யாத நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., இந்த அரசாணையை வெளியிட்டது.

12. அரசாணை வெளியிடப்பட்டதோடு தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, சென்னை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி ஆகிய இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

13. இதற்கென புதிய மசோதாவை உருவாக்கியது தமிழக அரசு. இந்த மசோதாவை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவைப் பெற்றது. ஆனாலும், அர்ச்சகர் பள்ளிகள் அந்த ஆண்டு தொடர்ந்து நடந்தன.

14. இந்த வழக்கில் 2015 டிசம்பரில் மீண்டும் குழப்பமான தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

மேலே உள்ள குறிப்புகளைப் பார்க்கும்போது இந்த விவகாரத்தில் தி.மு.க. தொடர்ந்து செயல்பட்டுவந்திருப்பதை யாரும் எளிதில் கவனிக்க முடியும். எப்போதுமே, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து பேசுவதே, நிகழ்கால வெற்றிகளுக்கு உதவும்.

ஆகவே, பெரியார் ஒரு அயோக்கியர், கருணாநிதி அயோக்கியர், திராவிடம் பேசியவர்கள் எதுவுமே செய்யவில்லை என்று புலம்பும் முன் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்வது நல்லது.

————————————————————————–

இந்த விவகாரங்கள் குறித்து மேலும் அறிய வேண்டியவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்:

1. பெரியார்: மரபும் திரிபும் – எஸ்.வி. ராஜதுரை, தமிழ் முழக்கம் வெளியீடு.

2. The renewal of the priesthood: modernity and traditionalism in a South Indian temple – சி.ஜே. ஃபுல்லர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வெளியீடு.

3. Towards a Non – Brahmin Millennium: From Iyothee Thas to Periyar – வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை

4. அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்? – திராவிடர் கழக வெளியீடு.