சென்னை:

1971ம் ஆண்டு பெரியார் ஊர்வலத்தில் நடைபெற்ற சர்ச்சை தொடர்பான வழக்கில், துக்ளக் ஆசிரியர் சோவிடம் குறுக்கு விசாரணை நடத்திய மூத்த வழக்கறிஞர் துரைசாமி பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார்.

ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்பதை நேரில் பார்க்கவில்லை என்றும், சங்பரிவார் அமைப்புகள் கூறிய தகவல் அடிப்படையிலேயே துக்ளக் பத்திரிகையில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது என்று கூறியதாகவும் தெரிவித்து உள்ளார்.

துக்ளக் 50வது ஆண்டு விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  பெரியாரின் சேலத்துக்கு பேரணியில் என்ன நடந்தது என்பது குறித்து தினசரி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சேலத்தில் நடந்த பெரியார் ஊர்வலத்தில், ராமர், சீதா உருவ பொம்மைகள் அவமதிக்கப்பட்டதாக சிலர் ஒப்புக்கொள்ளும் நிலையில், சிலர் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லைஎன்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதுதொடர்பான வழக்கில், துக்ளக் பத்திரிகையில் கார்டூன் படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சோவை விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அவரிடம் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  துரைசாமி குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது நடந்தது என்ன என்பது விளக்கம் அளித்துள்ளார்.

ராமலீலா என்ற பெயரில் இராவணன் உருவ பொம்மை வட இந்தியாவில் எரிக்கப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது. இது தமிழர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி அதை கைவிடும்படி திராவிட இயக்கங்கன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால், அதை  மத்திய அரசு கண்டு கொள்ளாததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமர், சீதை, லட்சுமணர் உருவ பொம்மைகளை எரிக்கும் போராட்டத்தை பெரியார் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்தே, 1971-ம் வருடம் சேலத்தில் பெரியார் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது என்றும், அந்த  பேரணியில் ராமர் சீதை போன்ற வைக்கோல் நிரப்பப்பட்ட பொம்மைகள் கொண்டு வரப்பட்டன.  அதில் நிர்வாணம் என்று எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பெரியார் பேரணிக்கு கருப்புகொடி கட்ட சங்பரிவார் அமைப்பினருக்கு சேலம் காவல்துறை அனுமதி வழங்கிதால், அவர்கள் மறைந்திருந்து பேரணியில் சென்ற பெரியார் மீது செருப்பை வீசியுள்ளனர்.

ஆனால், அந்த செருப்பு குறிதவறி, ராமர் சீதை  உருவ பொம்மைகள் கொண்டுவரப்பட்ட வாகனத்தில் விழுந்ததாகவும், இதைக்கண்ட  அந்த வாகனத்தில் இருந்த இயக்க உறுப்பினர் ஒருவர் அந்த செருப்பை எடுத்து ராமர் உருவ பொம்மையை சில அடிகள் அடித்தார்.

இதுதான் அப்போது நடைபெற்ற சம்பவம். இது தொடர்பான வழக்கிலும் சோ, சங் பரிவார் அமைப்பினர் கொடுத்த தகவல்களைக்கொண்டே கார்ட்டூன் படம் போட்டதாக தெரிவித்தார்.

வழக்கின் விசாரணைக்கு ஆஜரான துக்ளக் ஆசிரியர் சோ, ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்பதை நேரில் பார்க்கவில்லை என்று தெரிவித்தவர்,  சங்பரிவார் அமைப்புகள் கூறிய தகவல்களைக் கொண்டு, வரையப்பட பம் அது என்றும், அதைத்தான் நான் துக்ளக்கில் பத்திரிகையில் அட்டைப்படமாக வெளியிட்டோம் என்று தெரிவித்ததுடன், அது தொடர்பாக தன்னிடம் எந்தவொரு ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்ததாக வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும், பெரியார் குறித்து  ரஜினி பேசியது முழுக்க முழுக்க பொய்யான ஒன்று, அப்படி ஒரு நிகழ்வே நடைபெற வில்லை என்றும் கூறினார்.