சென்னை:

திமுகவின் உள்கட்சி பூசல் வெடித்து, ஒற்றை தலைமை தேவை என போர்க்கொடி எழுந்த நிலையில், இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனி சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், முக்கி யநிர்வாகிகள் பங்குகொண்ட ஆலேசானை கூட்டம்  தொடங்கி நடைபெற்றது.

இந்த   கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் தம்பிதுரை, பொன்னையா, வளர்மதி, வைகைச்செல்வன், வைத்திலிங்கம், செம்மலை, கோகுல இந்திரா ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மற்றும் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் சேவூர் ராமச்சந்திரன், எம்ஆர் விஜய பாஸ்கர், மணிகண்டன் காமராஜ், செல்லூர் ராஜூ, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்வி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, அன்பழகன், எஸ்பி வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஒற்றை தலைமை தேவை என குரல் எழுப்பிய மதுரை எம்எல்ஏ  ராஜன் செல்லப்பாவும் கலந்து கொண்டார். ஆனால், அமைச்சர்கள் ஓஎஸ் மணியன், சிவி சண்முகம் மற்றும் குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் கலந்துகொள்ளவில்லை.

கூட்டம் தொடங்கியது முதல் காரசாரமாக விவாதங்கள், கருத்து மோதல்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், கூட்டத்தில் பேசியது குறித்து வெளியே தெரிவிக்க அதிமுக தலைமை தடை போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கூட்டத்தில் ஒற்றை தலைமை, தேர்தல் தேல்வி மற்றும்  உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும்,  உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து,  அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சசர் ராஜேந்திர பாலாஜி:

கூட்டம் முடிவடைந்ததும், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒற்றை தலைமை தொடர்பாக இன்றைய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை என்று கூறினார். தற்போது உள்ளபடி செயல்பட ராஜன் செல்லப்பா ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

தற்போது உள்ள தலைமை அடிப்படையில் செயல்பட கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது எனவும், ராஜன் செல்லப்பாவும் அதை ஏற்றுக் கொண்டார். கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை,  கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம் எனவும் கூறினார். 

அமைச்சர் ஜெயக்குமார் :

“இது தேர்தலுக்கு பின்னால் நடக்கும் வழக்கமான கூட்டம்தான். உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை, ஒற்றைத் தலைமை குறித்து ஏதும் பேசவில்லை . ஒற்றை தலைமை குறித்த கோரிக்கை இனி அதிமுகவில் எழாது” என்றார்.

ராஜன் செல்லப்பா எம்எல்ஏ

ஒற்றைத் தலைமை குறித்து கூட்டத்தில் மறைமுகமாக பேசப்பட்டதாக தெரிவித்தவர், ஒற்றைத் தலைமை குறித்துபேச வாய்ப்பளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.   பந்தை எறிந்துள்ளேன் நடப்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கூறி வருவதால், கூட்டத்தில் நடைபெற்றது என்ன என்பது குறித்து அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.