திருவனந்தபுரம்: தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல என கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான சட்டம் என்ன சொல்கிறது என்பதை விரிவாக காணலாம்.
நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால், ஆபாச படங்களை இணையதளங்களில் பார்வையிடுவது, தரமிறக்குவது போன்றவை குற்றமாக கருதப்படுகிறது. பாலியல் வன்முறைகளை தடுக்கவே மாநில அரசுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும், ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் உலவ விட்டவர்கள், பார்த்தவர்கள், படங்களை அப்டோடு செய்பவர்கள், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள், பகிர்ந்துகொண்டவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் என ஏராளமானோரை சென்னை சைபர் போலீசார் கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தனர். ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இது சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது. . ஆபாச வீடியோ பார்த்தான், ஆடியோவைக் கேட்டான் என்று குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எல்லாம் நம் தலையிலேயே மண்ணை வாரிப்போடும் செயல் என சமூக சிந்தனையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை வயது பூர்த்தியான ஒரு தனிநபர், அவரது பர்சனல் லேப்டாப் அல்லது மொபைல் போன்களில், தனிமையில் வெறும் நுகர்வோராக இருந்து ஆபாசப் படங்களைப் பார்ப்பது சட்டப்படி குற்றம் இல்லை. குற்றமில்லை என்பதை விட இதற்காக தண்டனை அளிக்க தனி சட்டம் இல்லை என்று சொல்லலாம் .
“குற்றம் சாட்டப்பட்டவர் ஏதேனும் ஆபாசமான வீடியோ அல்லது புகைப்படங்களை பரப்பவோ அல்லது பகிரங்கமாக காட்சிப்படுத்தவோ முயன்றால், IPC 292 பிரிவின் கீழ் அது குற்றமாகும் என்றும் நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் கூறினார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த குற்றமும் இல்லை என்று கூறி, இந்த வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதே சமயம், குழந்தைகளை மகிழ்விப்பதற்காக இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன்களை வழங்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதி, இதன் பின்னணியில் உள்ள ஆபத்து குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மொபைல் போன்களில் இருந்து தகவல் தரும் செய்திகளையும் வீடியோக்களையும் மட்டும் அவர்கள் முன்னிலையில் பார்க்கவேண்டும், பெற்றோர்கள் மைனர் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ஒருபோதும் மொபைல் போன்களை ஒப்படைக்கக்கூடாது என்றும் நீதிபதி கூறினார்.
இதுமட்டுமல்லாமல், மொபைல் போன்களில் ஆபாச வீடியோக்களை மைனர் குழந்தைகள் பார்க்கத் தொடங்கினால், “தீவிர விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் அல்லது கால்பந்து அல்லது அவர்கள் விரும்பும் பிற விளையாட்டுகளை விளையாட விடுங்கள். எதிர்காலத்தில் நமது தேசத்தின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாக மாறும் ஆரோக்கியமான இளம் தலைமுறைக்கு இது அவசியம் என்று நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் கூறினார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292 என்ன சொல்கிறது?
பாலியல் ஈடுபாட்டை மிகவும் அதிகரிப்பதாகவோ, ஆபாச உணர்வுகளைத் தூண்டும் விதமாகவோ, ஒருவரின் மனதைக் கெடுப்பதாகவோ இருக்கும் எந்த விதமான ஆபாச வீடியோ அல்லது புகைப்படப் பதிவுகளை விற்பது, வாடகைக்கு விடுவது, பொது இடங்களில் காட்சிப்படுத்துவது, பலருக்குப் பகிர்வது, இந்த ஆபாசப் பதிவுகளை வைத்து லாபம் சம்பாதிப்பது, விளம்பரப்படுத்துவது, தயாரிப்பது உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 293 :
இருபது வயதுக்குக் குறைவான ஒரு நபருக்கு இத்தகைய ஆபாசப்படங்களை, வீடியோக்களை விற்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 :
ஆபாசமான பாடல்கள் பாடுவது, பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வது ஆகியவற்றைத் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 :
போக்ஸோ சட்டம் 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ’ சட்டத்தின்படி, குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வரையும், குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக குழந்தைகளின் ஆபாசப் படங்கள் அதாவது சைல்டு போர்னோகிராபி என்றால் என்ன என்பதன் விளக்கம் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி , புகைப்படம், வீடியோ டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகளை ஆபாசமாக சித்திரிக்கப்பட்டிருந்தாலும் அந்த படம் குழந்தைகளை வைத்து நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அல்லது குழந்தைகளின் படத்தை எடிட் செய்து சேர்த்திருந்தாலும்கூட அது சட்ட விரோதமே. மேலும் பெரியவர்கள் சிறியவர்களைப் போல நடித்திருந்தாலும் அது சைல்டு போர்னோகிராபி’ எனும் வகைப்பாட்டில்தான் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மாநில அரசுகள், பாலியல் அசம்பாவிதங்களை தடுக்க, குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள், பகிர்ந்தவர்களைப் பட்டியல் தயாரித்து வைத்திருக்கும் காவல் துறை, அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறது.