சென்னை: தமிழக கனிமவளங்களை கொள்ளையடிக்கும் இரண்டு பெரும் கொள்ளையர்கள் (ஒப்பந்ததாரர்கள்) வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருக்கமான இடங்களில் அமலாக்கதுறை ரெய்டு 2வது நாளாக  தொடர்ந்து வருகிறது.  மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் வீடு  உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை  நேற்று (செப்டம்பர் 12ந்சதேதி) நடத்திய  திடீர் சோதனையில், அதிகாரிகளின் போலி கையெழுத்துகள், போலி ரசீதுகள் மூலம் மணல் கடத்தியதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும்,  குறிப்பாக் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தபட்ட இடங்களில்  நடத்திய சோதனையிலும்  அமைச்சர் துரைமுருகன் சம்பந்தபட்ட குவாரிகளிளும் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம்,  தமிழக அரசுக்கு வருடம் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நடப்பதாக வந்த புகார்களையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னை உள்பட  பல்வேற மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மணல்குவாரிகளிலும்  திடீர் சோதனை மேற்கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பெருமாநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் தொடா் சோதனை மேற்கொண்டனா். முடிவில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனா்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர். மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த குவாரிகள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ள மணல் குவாரியில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனா். அப்போது குவாரியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்டவை குறித்து பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  மேலும் கனிம வளத்துறை இளநிலை பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 3 போிடம் விசாரணை நடத்தினா். மேலும் கூடுதல் விசாரணைக்காக அவா்களை அமலாக்க துறையினர் காரில் அழைத்துச் சென்றனர்.

திண்டுக்கல் நகர் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபா் ரத்தினம் என்பவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரத்தினத்தின் வழக்கறிஞர்கள் சிலர் அவரது வீட்டின் முன்பு குவிந்து அவரை சந்திக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து ரத்தினத்தின் வீடு, அலுவலகம், அவரது மைத்துனர் வீடு ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

புதுக்கோட்டையை சேர்ந்த திமுக பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான ராமச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.  புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ராமச்சந்திரன் மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வருகிறார். இது தவிர மிகப்பெரிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை மற்றும் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில், ராமச்சந்திரனுக்கு சொந்தமான அலுவலகம் உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியானிப்பட்டியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான செம்மண் குவாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி ரோடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் அருகே செவிட்டு ரங்கன்பட்டி பகுதியில் மணல் சேமிப்பு கிடங்கிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கூடுதல் விலைக்கு மணல் விற்கப்படுவதாகவும், நேரிடையாக மணல் விற்பனை செய்வதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மணல் வழங்க வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது. இதையடுத்து  2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, அதிகாரிகளின் போலி கையெழுத்துடன் மோசடி நடைபெற்றது தெரிய வந்துள்ளது. அதற்கான அவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் அமைந்துள்ள எழிலகம் வளாகத்தில் அமைந்துள்ள கனிமவளத்துறை அலுவலகத்திலும் அமலக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதே வளாகத்தில் நீர்வளத்துறை அலுவலகமும் அமைந்துள்ளதால் அந்த அலுவலகத்திலும் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் கிடைத்த ஆதாயங்களின் அடிப்படையில் சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகத்தில் சோதனையானது நடைபெற்றது. . மேலும் நீர்வளத் துறை அதிகாரிகள், கனிம வளத்துறை அதிகாரிகள் என இரண்டு துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து,  சென்னையில் இருக்கும் பொதுப்பணித்துறை பொறியாளர் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை நிறைவடைந்த நிலையில், மணல் குவாரியில் இருந்து எத்தனை யூனிட்  மணல் எடுக்கப்பட்டு வருகிறது என்ற விவரங்களை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  பல்வேறு பகுதிகளில் உள்ள மணல் குவாாிகளில் அமலாக்கத்துறையினா் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் புத்தூர் மணல் குவாரி இயங்காமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில், மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் சம்பந்தப்பட்ட இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. மேலும்,  திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல்லில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது. திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீட்டிலும், புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் வீட்டிலும் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

 மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரனின் நிஜாம் காலனி பகுதியில் உள்ள அலுவலகம், முகத்துப்பட்டிணத்தில் உள்ள அவரது வீடு, கே.எல்.கே எஸ் நகரில் உள்ள ஆடிட்டர் முருகேசனின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை தொடர்கிறது.

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதிகாரிகளின் போலி கையெழுத்துகள், போலி ரசீதுகள் மூலம் மணல் கடத்தியதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இந்த சோதனைகளின்போது கிடைத்துள்ள ஆவணங்களின் மூலம்,   தமிழக அரசுக்கு வருடம் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.