னியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், அதில் கலந்து கொண்டவர்களின் அநாகரிக பேச்சு மற்றும்  நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதன் உச்சக்கட்டமாக,  இந்து மக்கள் கட்சியினர் போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், கமலை கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நேற்று நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த ஆவேச பதில்கள் விவரம்….

கமலிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர்அளித்த பதில்களும்.

கேள்வி:  “பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணணும்.. உங்களை அரெஸ்ட் பண்ணணும்னு சிலர் வழக்கு தொடர்ந்திருக்காங்களே?”

பதில்:  ”நீதிமன்றத்தை நானும் நம்புகிறேன். மற்றபடி 11 வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒளிபரப்பப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இவர்களுக்கு இந்தி புரியாததால் தெரிந்திருக்காது. கன்னடத்திலும் வந்திருக்கு. அதுவும் தெரியாது. ஆனா கலாசாரம் மட்டும் தெரியும். தேசத்தைத் தெரிந்தவர்களுக்கு தேசத்தின் கலாசாரமும் தெரியவேண்டும்.

தசாவதாரம் எடுத்தால் கொண்டாடுவார்கள். விஸ்வரூபம் எடுத்தால் பிடிக்காது. இவர்களுக்குப் பயந்து கொண்டு இருக்க முடியாது. எனக்கு எல்லா ரசிகர்களும் வேண்டும். இவர்களும் ரசிகர்கள்தான், என்னை சிறையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிற ரசிகர்கள்!

கேள்வி:  ”இந்து மக்கள் கட்சி உங்களைக் குறிவைக்கிறார்களா.. அல்லது விஜய். டிவியைக் குறிவைக்கிறார்களா?”

பதில்: “இந்து மக்கள்… அப்டிங்கும்போதே காரணம் நான்தான். என் சட்டைக்கலர். தேவையில்லாம அவர்களையும் வம்புக்கு இழுக்க விரும்பல. ஆனால் அது விஜய் டிவியைக் குறி வைத்திருந்தால் அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!”

கேள்வி: ”ஜி.எஸ்.டி வரும்னு செய்திகள் வர்றப்ப ‘ஜி.எஸ்.டி வந்தால் நான் சினிமாவை விட்டு வெளியேறுவேன். ஜி.எஸ்.டி கட்டமாட்டேன் என்று சொல்லியிருந்தீர்கள்…”

பதில்: “இல்லல்ல. எல்லாமே  தப்பா ‘Quote’ பண்றீங்க. அமைச்சரோட பேசற அளவுக்கு வம்புல மாட்டிவிடறீங்க.  இது என்னுடைய அரசு. முகம் பிடிக்காம இருக்கலாம். அவங்க டிரஸ் பிடிக்காம இருக்கலாம். ஆனா நான் உருவாக்கின அரசு.

‘நான் கட்டபொம்மன் அல்ல. இது ஈஸ்ட் இண்டியா கம்பெனி அல்ல’ன்னு சொன்னத, ‘நான் கட்டபொம்மன் அல்ல.. இது ஈஸ்ட் இண்டியா கம்பெனி’னு மாத்திட்டாங்க.  குற்றம் சொல்லல. என் பேச்சு புரியாம இருக்கலாம்.

ஜி.எஸ்.டியக் குறைக்கணும்னு கேட்டுகிட்டோம். குறைச்சாங்க. குறைச்சதுக்காக நன்றி சொல்லாம இருக்க முடியாது. 28சதவிகிதத்தில  இருந்து 18 சதவிகிதத்துக்கு குறைச்சதுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். ஆனா அது போதாதுனும் சொல்லணும். இன்னமும் இது பரிசீலனைக்கு உரிய விஷயம்தான். என் அரசப்பாத்து நான் கோவிச்சுக்குவேன். அது எந்த அரசாக இருந்தாலும்!

கேள்வி: ”நீங்கள் உங்கள் கருத்துகளை அடிக்கடி வலியுறுத்திப் பொதுவெளியில் பேசுவதால், உங்களைக் குறிவைத்தே விமர்சிக்கிறார்கள், வழக்கு தொடுக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?”

பதில்:  “37 வருஷமா.. அதாவது என்னை நோக்கி ஒரு கேமரா திரும்பும்னு நான் நம்பினதுல இருந்து நான் என் கருத்தைப் பேசிட்டுதான் இருக்கேன்.

‘சட்டம் என் கையில்’ படத்துல முத்தக்காட்சில நடிச்ச கமல்ஹாசன் சீர்கெடுக்காத கலாசாரம், இப்ப பிக் பாஸுல கெட்டுப்போகுதுன்னா, காலதாமதமாக என் கைதை அவர்கள் கோருகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்!”

கேள்வி:  ”பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த வகைல சமூகத்துக்கும், கலாசாரத்துக்கும் தேவையான ஒண்ணு?”

பதில்: “கிரிக்கெட் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்குத் தேவையான ஒன்று. மேலும் அடுத்த வீட்ல புருஷன் பொண்டாட்டியப் அடிக்கறத பார்த்தா  ‘இந்த மாதிரிலாம் பண்ணி டாத’ம்பாங்க  அப்டி கத்துக்க  இது ஏதுவாக இருக்கும்.”

கேள்வி: “சேனலை விடுங்கள். சமூக ஊடகங்கள்ல உங்களுக்காகத்தான் நிகழ்ச்சியைப் பார்ப்பதாக, நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றே பலரும் கருத்து தெரிவிக்கிறார்களே..”

பதில்: “நம்பும் மக்களுக்கு  நான் நல்ல விருந்தளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நம்பாதவர்கள் கோவத்தின்பேரிலாவது இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் நல்லதுதான்.. பார்க்கட்டும்!”

கேள்வி: “விஸ்வரூபம் வந்தப்ப டிடிஎச்-ல  ஒளிபரப்பியபோது  திரைத்துறையினர் எதிர்த்தாங்க. இப்ப ஜி.எஸ்.டி பிரச்னை காரணமாக  சிலர் இனிமே டிடிஎச்லதான் ஒளிபரப்பணும்னு சொல்றாங்களே”

பதில்: “இந்த சுவருக்கு அறிவிருந்தால் புரிந்து கொண்டிருக்கும். இந்தச் சுவர் நான் இதுபற்றிப் பலமுறை கேட்டிருக்கு. அவர்கள் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்படுவேன்.”

கேள்வி:  “பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ என்று சொன்னதுக்கு பரவலாகப் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே?”

பதில்: “காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதிக்கொடுத்திருந்தால், அது என் பொறுப்பு. அதற்கு மன்னிப்பு கேட்கலாம். தவிர, அங்க எப்படி சென்சார் பண்ண முடியும்?

நான் வாழும் சொசைட்டில அதவிட மோசமான வார்த்தைகள் பேசிட்டுதான் இருக்காங்க. சாதினு பேசறாங்க. அதையே நீக்க முடியல.’’

“நீங்கள்கூட கஞ்சா கருப்பிடம் ‘சைவம் சாப்பிடும் உங்களுக்கு கோபம் வரலாமா?’ என்று கேட்டீர்கள். அப்படியானால் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு கோவம் அதிகம் வருமா?”

“மற்ற எல்லா மொழிகளிலும் சைவம் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. தமிழில் மட்டுமே அது மதத்தின் பெயரால் உலவுகிறது. அசைவம் என்றால் ஒரு மதமாகப் பார்க்கப்படுகிறது. மற்றபடி இது வரலாற்று ரீதியாக, மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.”

கேள்வி: “கேளிக்கை வரி இல்லாத படங்களுக்குக் கூட மக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கிறார்களே.. அப்ப நீங்க திரைத்துறையை எதிர்த்துக் குரல் எழுப்புவீர்களா?

பதில்: “மக்களாகிய நீங்கள் யோசியுங்கள். நாங்கள் செய்யும் தொழில் எவ்வளவு சிரமம் என்று உங்களுக்குத் தெரியும். கருப்புக்கலரோ, செவப்புக்கலரோ கலந்திருக்கற சோடாக்கு குடுக்கற மரியாதையை விட என் சினிமாவுக்கு விலை வடிவில் நிர்ணயிக்கப்படும்போது எனக்குக் கோபம்தான் வரும்.

ஏன்னா அரைமணிநேரத்துக்கு மேல அந்த சோடாவை வைத்துக் குடித்தால் போரடித்துவிடும். அதன் காட்டம் குறையும். நாங்க ரெண்டரை மணிநேரம் தாக்குப்பிடிக்கறோமே.”

கேள்வி: “பிக் பாஸ் மூலமா என்ன கருத்தைச் சொல்ல வர்றீங்க?”

பதில்: “கூடி வாழ்தல். உளவியல் மாற்றங்கள் நிகழும். கே.பாலசந்தர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் போன்றோர் பணமா பாசமா, பூவா தலையா, எதிர்நீச்சல் மாதிரியான படங்களில் கூட்டுக்குடும்பத்தில், ஒரே வாழிடத்தில் நடக்கும் சச்சரவுகளைப் பற்றிப் பேசினார்கள். அதுதான் பிக் பாஸ். அதில் பாலசந்தர் என்ற ஒருவர் எழுதுகிறார். இதில் அவங்கவங்க எழுதிக்கறாங்க.”

கேள்வி:  “கேளிக்கை வரி சம்பந்தமா தமிழக அரசுக்கு உங்க வேண்டுகோள் என்ன?”

பதில்: “சினிமாவை நசுக்கும் எந்தவிதமான வரியையும் விதிக்காதீர்கள். மேசைக்கடியில் நடக்கும் எந்த வியாபாரத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்!”

கேள்வி: ’சத்யமேவ ஜெயதே’ மாதிரியான நிகழ்ச்சியை நீங்க பண்ணிருந்தா இந்த மாதிரி கேள்விகள், எதிர்ப்புகள்  வந்திருக்காதே…”

பதில்: “நான் என் லைஃப்லயே சத்யமேவ ஜெயதே’வப் பண்றேன். காசு வாங்காம. 37 வருஷமா  நற்பணிமூலமா அதான் பண்றேன். பிடிக்காதுனு ஹேராம், விருமாண்டிலாம் எடுக்காம இருக்க முடியாதே? பிக் பாஸ் ஹவுஸ்ல இருக்கற பலருக்கு  தமிழ் சரியா பேசவராது.  தமிழ்த்தாய் வாழ்த்து தெரியாது. அதெல்லாம் கத்துக்கறாங்க.”

கேள்வி:  “வையாபுரி மனைவி ‘அவர் ரெண்டு வாரத்துல வந்துடுவார்னு சொல்ற ஆடியோ ஒண்ணு சுத்துதே”

பதில்: “அவர் சொல்லிட்டுப் போயிருக்கலாம். நான் ரெண்டு வாரத்துல வந்துடுவேன்னு. அதை அவர் மனைவி சொல்றாங்க.”

கேள்வி:  உங்கள் நண்பர் ‘சிஸ்டம் சரியில்லை’ என்றார். நீங்கள் ‘சட்டசபைக்கு மறுதேர்தல் வைக்கணும்’னு சொன்னீங்க..”

பதில்:  “ரெண்டும் ஒரே கருத்துதான். ஒரே திசையை நோக்கிச் செல்லும் வெவ்வேறு கருத்து. இன்னொண்ணு, சிஸ்டம் சரியில்லைனு மொதல்ல சொன்னது நான். ஒன்றரை வருஷம் முந்தி சொன்னேன். ரொம்ப நன்றி அவருக்கு.”

கேள்வி:  “ரஜினி கட்சி தொடங்கினால் உங்கள் நிலைப்பாடு என்ன?”

பதில்: ”நியாயமாக இருந்தால்  நல்லது நடக்கும்.   இல்லையென்றால் என் விமர்சனங்கள் அவருக்கும் பொருந்தும்.”

கேள்வி: ”தமிழகத்தில் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுதுனு நீங்க சொன்னதுக்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் ‘கமல்ஹாசன் பொத்தாம்பொதுவாகச் சொல்வதை ஏற்கமுடியாதுனு சொல்லியிருக்காரே?”

பதில்:  “ரோடு சரியில்லைனு சொல்றேன். நான் ஒரு ரோடு வழியா கடந்துபோயிருப்பேன், காட்டுன்னா? சரி.. நான் சொல்றேன். எல்லாத்துறையிலயும்.. மறுபடியும் சொல்றேன்..  எல்லாத்துறையிலும்!”

கேள்வி: ”விளம்பரம், டி.வி நிகழ்ச்சில பங்கேற்கறதுலாம் உங்கள் பணத்தேவைக்கா.. விரும்பி செய்கிறீர்களா?”

பதில்: “விரும்பித்தான் செய்கிறேன். ஆனால் ‘பணத்துக்காகச் செய்யவில்லை சமூகசேவைக்காகச் செய்கிறேன் என்று சொல்ல நான் அரசியல்வாதி இல்லை. இதுதான் என்னுடைய சம்பாத்தியம். இதிலிருந்துதான் என் வீட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.”

கேள்வி: “பிக்பாஸ் ஷோவில், உங்கள் கருத்தைச் சொல்ல சேனல் நிர்வாகம் தடையாக இருக்குமா?”

பதில்: “இல்லை. நான் எடுப்பதுதான் முடிவு.”

கேள்வி: “கேரளாவில் ஒரு நடிகர், நடிகை ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதாகியிருக்கிறாரே.. அது பற்றி..”

பதில்: “அதில்தான்  நீதிக்கு உண்டான மரியாதையாக நான் பார்க்கிறேன்.”

கேள்வி: “கேரளாவில் நடிகைகள் தங்கள் பாதுகாப்பிற்காக  அணி திரண்டிருக்கிறார்கள்.  சினிமா வில் பெண்கள் பாதுகாப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

பதில்: “அது என்ன சினிமாவில்? எல்லா இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம். ஒரு பெண்  பத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான்  இங்கிருக்கும் ஒவ்வொரு ஆணின் கடமை.’’

இவ்வாறு கமலின் பேட்டி சில சமயம் ஆவேசமாகவும், பல நேரம் சுவராஸ்யமாகவும் நடந்தது.