சேலம்:

ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்த விட்ட முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சமீபத்தில் காஷ்மீர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில், பாஜகவுக்கு அதிமுக ஆதரவு கொடுத்து குறித்து ப.சிதம்பரம் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி,  ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது? என்று கேள்வி எழுப்பியவர் அவரால் ஏதும் கிடைக்கவில்லை என்றும், அவர்  பூமிக்குத்தான் பாரம் என்றும்  கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக குறித்து ப.சிதம்பரம் பேசியது என்ன?

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் காஷ்மீர் உரிமைப் பறிப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம், ‘வரலாறு தெரியாதவர்கள் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்துவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் பா.ஜ.கவிற்கு தலைவர்கள் என்று யாரும் இல்லை. அதனால்தான் காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலைத் திருடிக்கொண்டார்கள் என்று கூறியவர், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் மதவெறி காரணமாக  பா.ஜ.க இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று விமர்சித்தார்.

காஷ்மீர் இன்றும் பதட்டத்துடன்தான் இருந்து வருவதாக கூறியவர்,  காஷ்மீரை கலைத்தது போல் தமிழ்நாட்டை யூனியன் பிரதேசமாக மாற்றினால் சும்மா இருப்பீர்களா..  ஆனால், அதற்கும் அதிமுக கைக்கட்டி, தலை வணங்கி நிற்கும்… சட்டத்தைப் படிக்காமலே அ.தி.மு.க எல்லா வற்றிக்கும் ஆதரவு கொடுக்கிறது என்று கடுமையாக சாடியிருந்தார்.