திராவிடம் – நான் என்ன செய்தேன்? – கவிஞர் ராஜ்குமார் மாதவன்
திராவிடம் நான்
எப்படி பிறந்தேன்
யார் வைத்த பெயர் ?
சரித்திரம் படித்தால்
சுதந்திர இந்தியாவிற்கு முன்
மெட்ராஸ் ப்ரெசிடென்சி-
மைசூரும், ஐதராபாத் அற்ற ஆந்திரமும்,
கொஞ்சம் கேரளமும்
கலந்த கலவை
தமிழ் மொழி மாநிலம்,
ஆனால் அது தமிழர் நாடு அல்ல
மொழி துவேசம்
இன துவேசம்
பேசியிருந்தால்
மெட்ராஸ் ப்ரெசிடென்சி
ஒரு முள்ளிவாய்க்கால் கண்டிருக்கும்.
திராவிட சொல் எங்கிருக்கு
தேடி சொல் எனும் தம்பிக்கு
நான் யார் என்பதை என் எதிரியிடம்,
அல்லது என் எதிரில் இருப்பவனிடம் கேள்
சமஸ்க்ரிதம் தேடி படி,
திராவிடம் யார் என்பதை
ஊரும், நீயும் அறிவாய்.
ஒரு நிலம்,
ஒரு இனம்,
ஒரு மொழி,
நீ பேசும் அரசியல் !
ஒரு நிலம் பல மொழி
ஒரு நிலம் பல இனம்
ஒரு மொழி பல நிலம்
ஒரு மொழி பல இனம்
ஒரு இனம் பல நிலம்
ஒரு இனம் பல மொழி
அறிவாயா நீ !
கிணற்று தவளை
உலக அரசியல், பேசலாமா ?
ஊர் குருவி
உயரப்பறந்தால், பருந்தாகலாமா ?
வான் கோழி
தோகைவிரித்தல், வண்ண மயிலாகுமா ?
சாதி ஒழித்தாயா ?
உன் பாட்டன், பூட்டான்
பேரில் இருந்த சாதி எங்கே ?
உன் பேரில் சாதி உண்டா ?
அகில இந்தியாவில்
சாதியின்றி பெயருண்டா ?
அபேட்சகரை வேட்பாளராக்கி
மிட்டா மிரசுடன் போட்டியிட்டு
சாமானியனுக்கு சனநாயகம் சமைத்தோம்!
தேடி படி,
வாக்காளன், வேட்பாளர் வீட்டில் நின்று,
வாக்களிப்பேன் என்றது போயி,
வாக்காளன் வீட்டில் வேட்பாளர் வந்து,
வாக்கு கேட்டது யாரால் ?
ஜமீனில் பேசிய அரசியலை
முடி திருத்தும் கடையிலும்
மிதிவண்டி கடையிலும்
தேநீர் கடையிலும்
அங்காடி தெருவிலும்
பேச வைத்தது யார் ?
சுதந்திரம் தந்த சனநாயகத்தை
சாமானியனுக்கு கொண்டு சேர்த்து யார் ?
கக்கத்தில் இருந்த துண்டை
தோலுக்கு கொண்டுவந்த சரித்திரம்
யார் அறிவார் ?
சம பந்தி விருந்து,
திருமண அழைப்பிதழில்,
பல சாதிமான் பெயர்கள்,
ஏழைக்கும் ஒரு சால்வை,
ஏற்றத்தாழ்வற்ற ஒரு மேடை இருக்கை,
அறுபது ஆண்டுமுன் யோசித்துப்பார் !
எழுபதுக்கு முன்,
ஒரு நிலப்பத்திரம் உன்னிடத்தில் உண்டோ ?
நிலம் உச்சவரம்பு சட்டம்,
உழுதவனுக்கு நிலம்,
உன்வீடு வந்து,
பத்திரம் சேர்ந்தது !
எம்பதுக்கு முன் ஒரு பட்டதாரி,
உன்வீட்டில், இல்லை உன் தெருவில்,
இல்லை உன் கிராமத்தில் உண்டோ ?
படிப்பை உன்னில் திணித்தவன் யார் ?
பள்ளியில் உணவு !
சமதர்மம் பேணும் சீருடை !
போயி வர இலவச பஸ் பாஸ் !
பத்தாம் வகுப்புக்கு வந்தால்
மிதிவண்டி, மடி கணினி !
பெண் படித்தால்,
திருமண உதவி திட்டம்,
உன்னில் கல்வியை திணித்தவன் யார் ?
மோடியின் புதிய கல்விக்கொள்கை,
கனவு இலக்கு 2035 -இல் 50 % GER,
என்றோ எட்டிப்பிடித்தோம் !
உன்னில் கல்வியை திணித்தவன் யார் ?
பெண்ணுக்கும் கல்வி
சொத்தில் சமஉரிமை
உள்ளாட்சி ஒதுக்கீடு
இந்தியாவில் இன்றும் இல்லை
தமிழகத்தில் என்றோ தந்தது !
மொழிக்கு என்ன செய்தேன் ?
மொழியை தெய்வமாக்கி,
தமிழ் தாய் வாழ்துக்கண்டேன் !
நன் நிலம் பெயர் கண்டேன் !
வீடெங்கும் குறள் சேர்த்தேன்,
வள்ளுவனுக்கு கோட்டம் கண்டேன்,
வானுயர சிலையும் கண்டேன்,
சங்கத்தமிழ் மாநாடு,
செம்மொழி அந்தஸ்து-
காண கண்டேன் !
மொழி போர் கண்டு,
உயிர் தமிழ் காத்தேன் !
இந்தியாவில்- தாய் மொழி இழந்த,
மற்றவரை கேள்,
மொழிக்கு நான் என்ன செய்தேன் ?
திராவிடம் எமது
பெருந்தன்மையின் அடையாளம்,
எம் பகையின் குறியீடு,
என் சேய் மொழிகளின்
வழிவந்த சகோதர்களின்,
தாய்வீடு ! இருந்தும்,
தமிழும், தமிழரும்
எம்மிரு கண்கள் !
திராவிட தாயெங்கே ?
சேய் எங்கே என்றாய் ?
தாயாக சேய்வேண்டும் !
தாய்மைக்கு எதுவேண்டும் ?
நிலத்தில் பிறந்தால் நிச்சயம் குடிமகன் !
நெஞ்சத்தில் உணர்ந்தால்,
உணர்வால் குடிமகனே !
நன்நிலம் தமிழகத்தில்
நெஞ்சத்தில் உணர்ந்தால்,
உணர்வால் குடிமகனே !
சரித்திரம் படித்தால்,
திராவிடம் என்ன செய்தது என்பாரா ?
இருந்தும் கேட்டால்,
திராவிடம் என்னை செய்தது என்பேன் !