சென்னை :
கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று தமிழகத்தின் அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி இதுவரை அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் கேள்விக் குறியாக்கிவிட்டது.
சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்தின் (சி.எம்.டி.ஏ) கட்டுப்பாட்டில் இயங்கும் கோயம்பேடு மார்கெட்டிற்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஏப்ரல் 28 அன்று கோயம்பேடு வியாபாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற, வியாபாரிகள் பிரதிநிதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது, இது அந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது.
கடந்த மார்ச் 24 ம் தேதி நாடுதழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு ஒருவாரம் முன்னரே தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்கள் மற்றும் மால்களை மூடிய தமிழக அரசு, கோயம்பேடு வணிகவளாகத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோயம்பேடு சந்தையை நிர்வகிக்கும் சி.எம்.டி.ஏ. துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களின் இலாகாவின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 29 மற்றும் மார்ச் 30 ஆகிய தேதிகளில் கோயம்பேடு மார்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர், அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்க படுவதாகவும், உள்ளே வரும் வாகனங்கள் கிருமிநாசினி தெளிக்கப் படுவதாகவும் அறிவித்து வீடியோவையும் வெளியிட்டார்.
ஆனால், இன்று ஏற்பட்டிருக்கக்கூடிய தொற்றின் தாக்கத்தை பார்க்கும்போது, செய்தியாளர்கள் படம் பிடித்து விட்டு சென்றவுடன், இவையனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.
தனது இலாகாவின் கீழ் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும் போது தனது சொந்த மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்க படும் உணவின் தரம் குறித்தும், பத்திரப்பதிவுத்துறையை மீண்டும் செயல்படுத்துவது குறித்தும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். கவனமாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது தவிர, கடந்த மார்ச் மாதம் 24 ம் தேதி முதல், இதுநாள் வரை, ஒவ்வொரு நாளும் இந்த கோயம்பேடு சந்தையில் எத்தனை பேருக்கு இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பிவருகிறார்கள்.