What bro? First, know bro..

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்புக் கட்டுரை

பொதுவாக புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்த எடுப்பில் மிஸ் பண்ண மாட்டார்கள்..

ஒன்று செய்தியாளர்கள் சந்திப்பு..

தன்னுடைய லட்சியம் என்ன, கொள்கை என்ன, ஒவ்வொரு  விஷயத்திலும் தற்போதைய நிலைப்பாடு என்ன, எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதையெல்லாம் சொல்வார்கள்.

தனக்கு எவ்வளவு விஷயம் ஞானம் இருக்கிறது என்பதை நிரூபிக்க செய்தியாளர்களின் சரமாரியான கேள்விகளை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்..

இரண்டாவது விஷயம்,  இடைத்தேர்தல்.

எதிர்பாராமல்  இடைத்தேர்தல் வந்தால் அதில் பலத்தைக் காட்டியே தீர வேண்டும்,  சோதித்தே தீர வேண்டும் என்று களம் காண்பார்கள்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி இரண்டாவது ஆண்டு துவக்க விழாவையே கொண்டாடும் நடிகர் விஜய், இந்த இரண்டு விஷயங்களையும் தொடவே இல்லை.

ஒன்று அறிக்கை விடுகிறார், இல்லையென்றால் மேடையில் பேசி விட்டு போகிறார். எழுத்துக்கள், பேச்சுக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை.

விஜய்யின் சமயோசித அறிவு எப்படி இருக்கும் என்பதை பொதுவெளி சமூகம் இதுவரை காண முடியவில்லை.

கேள்விகளை எதிர்கொள்ளத்தான் தயங்குகிறார் என்றால் களத்தில் இறங்கி மக்களுக்காக போராடுகிறாரா மக்களோடு மக்களாக பழகுகிறாரா என்றால் அதுவும் கிடையாது.

தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாள் என்றால்கூட வீட்டிலேயே ஃபோட்டோ வைத்து மரியாதை செலுத்தி ஒன்லி ஒர்க் ப்ரம் ஹோம் என்கிறார்..

வெள்ள நிவாரண உதவிகளை கூட பாதிக்கப்பட்டு பகுதிகளுக்கு செல்லாமல் மக்களை தன் வீட்டுக்கு அழைத்து வழங்குகிறார், தொடரும் இது போன்ற நிகழ்வுகளால் “பனையூர் பண்ணையார்” என்றே அவரை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் அடிக்கின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையிலே அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் முடித்துக் கொள்வதால் பேசாமல் கிகசா கழகம் என்று கட்சிக்கு பெயரை வைத்திருக்கலாம் என்று கூட  தோன்றுகிறது.

இரண்டாம் ஆண்டு விழாவில் விஜய் பேசிய பேச்சிலிருந்து இரண்டு விஷயத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

தமிழ்நாட்டில் தற்போது பற்றி எரியும் பிரச்சனை, மும்மொழி திணிப்புக்கு எதிர்ப்பு. இரு மொழிக் கொள்கையை கையில் ஏந்தி தமிழ்நாட்டில் பாஜகவை தவிர அத்தனை கட்சிகளும் வாளை சுழற்றி சுழற்றி வீசுகின்றன.

ஆனால் விஜயோ பட்டும் படாமல், “ஒரு மொழியை திணிப்பதை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று கழண்டு கொண்டு போய்விட்டார்.

அப்புறம் 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்தது போல் 2026-ல் புரட்சி நடக்கும் என்கிறார்.

அதாவது 2026ல் அவரது தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்குமாம்.

தேர்தல் களம் மூலம் தனது கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியில், சட்டமன்றத் தொகுதியில் ,ஒரு  கவுன்சிலர் வார்டில் எவ்வளவு வாக்குகள் என்பதை கூட இன்னமும் அனுபவபூர்வமாய்  தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் விஜய் இப்படி சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.

1967-ல் நடந்த புரட்சி, மாபெரும் இயக்கமான காங்கிரஸ் கட்சியை வீட்டிற்கு அனுப்பி விட்டு திமுக  ஆட்சியைப் பிடித்த வரலாற்று சம்பவம் .

இந்தியாவில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு மாநிலக் கட்சியை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர வைத்த  அந்த சாதனையை செய்தவர் பேரறிஞர் அண்ணா.

கட்சி ஆரம்பித்த ஓராண்டிலோ ஈராண்டிலோ இதை அவர் சாதித்து விடவில்லை.

18 ஆண்டு காலம் போராட வேண்டி இருந்தது. அதுவும் எப்படி? எண்ணற்ற பிரச்சார பீரங்கி  தளபதிகளை உடன் வைத்துக் கொண்டு.

முதன்முறையாக 1957 கட்சியை போட்டியிட வைத்து 15 எம்எல்ஏக்கள், அடுத்த 1962 சட்டமன்ற தேர்தலில் ஐம்பது எம்எல்ஏக்கள் என படிப்படியாக முன்னேறி மூன்றாவது சட்டமன்றத் தேர்தலில்தான் அண்ணாவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

தேர்தல் பிரச்சார காலகட்டத்தில்  எம்ஜிஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நடந்து அனுதாப அலை எழும்பாமல் இருந்திருந்தால், திமுக வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும் என்று அடித்து சொல்லும் காங்கிரஸ்காரர்கள் இன்றும் உண்டு.

67ல் அண்ணாவின் புரட்சி என்றால் 77 -ல் நடந்த புரட்சி, எம்ஜிஆர் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

நடித்தார், கட்சி ஆரம்பித்தார், முதலமைச்சரானார் என்று  ஒரே வரியில் சொல்லிவிட்டு போகலாம்.

ஆனால் அதற்குப் பின்னால் எத்தனை ஆண்டு காலம் உழைப்பு, எப்படிப்பட்ட வரலாற்று சம்பவங்கள் எல்லாம் இருக்கின்றன என்பது பற்றி தவெ.க. தலைவர் விஜய் போன்றவர்களுக்கு தெரியுமா என்பதுதான் தெரியவில்லை.

1977-ல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்கு முன்பாக 25 ஆண்டு காலம் அரசியல்வாதியாக பல அனுபவங்களை கண்டவர் எம்ஜிஆர்.

1957,1962, 1967 மற்றும்  1971 ஆகிய நான்கு சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் திமுகவுக்காக பிரச்சார பீரங்கியாய் வலம் வந்து வெற்றி மேல் வெற்றி வாங்கித் தந்தவர்.

1962ல் எம்எல்சி ஆக நியமிக்கப்பட்டு முதன்முறையாக தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர். 1967 முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் கண்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.

திமுக என்ற இயக்கத்தில் மூன்றாவது பெரிய பதவி ஆன பொருளாளர் பதவி வரை எட்டிப் பிடித்தவர்.

1971 சட்டமன்ற பொது தேர்தலில் திமுக அதிகபட்சமாக 184 தொகுதிகளில் வெற்றி பெற்றதில் எம்ஜிஆர் பிரச்சார பங்கு அலாதியானது.

15 ஆண்டுகள் திமுகவில் இப்படி வளர்ந்து பழுத்த அரசியல்வாதியாக திகழ்ந்ததால்தான் 72-ல் கட்சியை விட்டு நீக்கப்பட்டபோது அவர் கலங்கவே இல்லை. திமுகவை கைப்பற்றியே தீருவேன்  என்றெல்லாம் உதார் விடவில்லை

அதேபோல பேருக்கு தனி கட்சி ஆரம்பித்து விட்டு அந்தப் பக்கம் போய் சினிமாவே கதி என்றும் இருக்கவில்லை.

ஆறே மாதத்தில் வந்த இடைத்தேர்தல், தனது பலத்தைக் காட்டக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு என்று நம்பிக்கை கொண்டார்.

அதுவும் ஆறு மாத குழந்தையான அதிமுக சந்தித்தது  ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு மக்களவை தொகுதி இடைத்தேர்த லை.

எதிரே களத்தில் இருந்தவர்கள் அதிகாரத்திலிருந்த முதலமைச்சர் கலைஞர், பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் மற்றும்  பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் என மொத்தம் மூன்று பலம் வாய்ந்த அரசியல்  எதிரிகள்.

1972, மே மாதம் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் வாக்குகள்  எண்ணியபோது, மாநிலமே அதிரும் வகையில் அந்த திண்டுக்கல் தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக மாபெரும் வெற்றியை கண்டது.

இந்திராகாந்தியின் வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.. அதைவிட அதிர்ச்சியான விஷயம், ஆளுங்கட்சி திமுக வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தூக்கி அடிக்கப்பட்டது தான்.

அதிமுகவின் பாய்ச்சல் அத்தோடு நிற்கவில்லை. கோவை சட்டமன்ற இடைத் தேர்தலை வென்றெடுத்தது.  புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது.

எல்லாவற்றிலும் சிகரமாக 1977 மக்களவை பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியே மகத்தான வெற்றியை பெற்றது.

இதன் பிறகே தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக முதன்முறையாக களமிறங்கி  நான்கு முனை போட்டியில் வெற்றி வாகை சூடி ஆட்சி கட்டிலிலேயே அமர்ந்தது..

“நடிகர் என்ற வசீகரத்தை வைத்து எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தார் ஆட்சியைப் பிடித்தார்” என்று சுலபமாக சொல்பவர்களுக்கு இந்த 25 ஆண்டு அரசியல் உழைப்பு தெரியவே தெரியாது.

வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில் புரட்சி நடக்கும் என்று பேசும் தவெக தலைவர் விஜய்க்கும் இதெல்லாம் தெரியுமா என்று புரியவில்லை..

ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு என்றாலும் ஆசைக்கும் பேராசைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்