சேலம்:

சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பாலத்தை  இன்று (11.06.2020) திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு சிறப்புரை ஆற்றினார்.  அப்போது, சேலம் மாவட்டம் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள், சிறுபாலங்கள் குறித்த தகவல்களை பட்டியலிட்டார்.

அவர் பேசியதாவது,  அனைத்து ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலை வர் அவர்களுக்கும், நெடுஞ்சாலை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும் முதற்கண் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அருளாசியோடு, சேலம் மாநகர மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஐந்து ரோடு இரண்டடுக்கு மேம்பாலம் இன்றையதினம் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் 2012-ஆம் ஆண்டு நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற காலக்கட்டத்தில், சேலம் மாநகர மக்கள், நகரத்திற்குள் செல்கின்ற சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகின்ற காரணத்தால் சாலை சந்திப்பில் மற்றும் இரயில்வே கடவுகளின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள்.

அதனடிப்படையில், 2012-ஆம் ஆண்டு சேலம் மாநகர மக்கள் வைத்த கோரிக்கையை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களிடத்தில் அளித்தேன். அதிலொன்று, இன்றையதினம் திறக்கப் பட்டுள்ள  ஐந்து ரோடு இரண்டடுக்கு மேம்பாலம், அதோடு, ஏ.வி.ஆர் ரவுண்டானா மேம்பாலம், திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா உயர்மட்டப்பாலம், முள்ளுவாடி கேட் பகுதியில் இரயில்வே கடவுகளின் குறுக்கே இரண்டு உயர்மட்டப் பாலங்கள், மணல்மேடு பகுதியில் இரயில்வே கடவின் குறுக்கே உயர்மட்டப் பாலம், செவ்வாய் ப்பேட்டை பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு அம்மா அவர்களிடம் இதையெல்லாம் கோரிக்கையாகக் கொடுத்தபொழுது, இன்னும் ஏதாவது இருக்கின்றதா? இவ்வளவுதான் பாலங்களா? என்று என்னிடத்தில் கேட்டார்கள். சேலம் வளர்ந்து வருகின்ற நகரமாக இருக்கின்ற காரணத்தாலும், சேலம் பிரதான சாலையில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிற காரணத்தினாலும், உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டவுடன், மாண்புமிகு அம்மா அவர்கள் உடனடியாக நான் குறிப்பிட்ட அந்தப் பாலங்களுக்கு அனுமதி வழங்கி, அவைகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்கி, அந்தப் பணிகளெல்லாம் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

ஏற்கனவே ஏ.வி.ஆர் ரவுண்டானா உயர்மட்டப் பாலம், திருவாக்கவுண்டனூர் ரைவுண்டான பாலம் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, சேலம் இரும்பாலைக்குச் செல்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்டப் பாலம் அம்மாவின் அரசால் திறக்கப்பட்டு விட்டது. மேலும், பிற பாலங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மண்ணிலிருந்து மறைந்தாலும், அவர் அருளாசியோடு, அவர் அறிவித்தத் திட்டங்கள் நமது கண் முன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. அவருடைய அறிவிப் பால் உருவாக்கப்பட்ட இந்த ஐந்து ரோடு இரண்டடுக்கு மேம்பாலத்தை இன்றையதினம் திறந்து வைத்ததில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவைப் போற்றும்விதமாக, இந்த இரண்டடுக்கு மேம்பாலத்திற்கு “புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா இரண்டடுக்கு மேம்பாலம் என அம்மா அவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதேபோல, முன்னாள் முதலமைச்சர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களைப் போற்றும்விதமாக குரங்குசாவடி முதல் ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலான உயர்மட்டப்பாலத்திற்கு”புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மேம்பாலம்  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்றையதினம் பல்வேறு பாலங்கள் வேண்டுமென்று சேலம் மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கை களை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.

இளம்பிள்ளை மற்றும் பல்வேறு கிராமங் களுக்குச் செல்கிற மக்கள், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது ஏற்படும் உயிர் பலி மற்றும் விபத்துக் களைத் தடுப்பதற்கு, அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கந்தம்பட்டி சந்திப்பில் உயர்மட்டப் பாலம் ஒன்று முடியும் தருவாயில் இருக்கிறது.

வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் சகோதரி மனோன்மணி அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து ஆட்டையாம்பட்டி, திருச்செங்கோடு செல்லும் சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக அரியானூரில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மரியாதைக்குரிய சட்டப்பேரவை உறுப்பினர் திரு.ராஜா அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று மகுடஞ்சாவடியில் உயர்மட்டப் பாலம், முத்துநாயக்கன்பட்டி இரயில்வே கடவின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.

தொளசம்பட்டி இரயில்வே கடவின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ஏ.எஸ்.டபுள்யூ தொழிற்சாலை அருகில் இரயில்வே கடவின் குறுக்கே உயர்மட்டப் பாலப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.

முதற்கட்டப் பணிகள் நடைபெறுகின்ற சில பாலங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

சீலநாயக்கன்பட்டி சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சர்வீஸ் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாமாங்கம் அருகில் ஒரு உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான தமிடிநநாடு அரசின் கோரிக்கையை மத்தியஅரசு ஏற்றுள்ளது.

செல்லியம்பாளையம் பகுதியிலிருந்து நரசிங்கபுரம், ஆத்தூர் செல்கின்ற பிரிவுச் சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக செல்லியம்பாளையத்தில் உயர்மட்டப் பாலம் கட்ட மத்திய அரசின் அனுமதி விரைவில் கிடைக்கவிருக்கிறது.

ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆத்தூர் ரயில்வே கடவின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் சகோதரி சித்ரா அவர்கள் வைத்த கோரிக்கை, ஏற்கனவே பரிசீலனையில் இருந்தது, வாழப்பாடி மற்றும் அயோத்தியாபட்டணம் ரயில்வே கடவுகளின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை இவ்வளவு பாலங்கள் கட்டியதே கிடையாது.சேலம் மாநகரில் சீலநாயக்கன்பட்டி மற்றும் மோகன் குமாரமங்களம் அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் தான் பாலம் இருந்தது.

நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியோடு விபத்தைக் குறைப்பதற்கும், மக்கள் எளிதாக பயணம் செல்வதற்கும் பாலங்கள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டு, இத்தனை பாலங்களை நாங்கள் கட்டி முடித்து சேலம் மாவட்டம் போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக தற்பொழுது உருவாக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், மேட்டூர் 16-கண் பாலத்தில் பாலம் கட்டித் திறக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ், நதிகள், ஓடைகளின் குறுக்கே பல பாலங்கள் சேலம் மாவட்டத்தில் கட்டி மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றையதினம் ஐந்து ரோடு இரண்டடுக்கு மேம்பாலம் சுமார் ரூபாய்  441 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது, இதன் மொத்த நீளம் 7.87 கிலோமீட்டர்.

இரண்டடுக்கு மேம்பாலம் முதன்முதலில் சேலத்தில் தான் திறந்துள்ளோம். இது நம்முடைய சேலம் மாநகரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.