வேலூர்: கொள்ளைபோன வேலூர் ஜோஸ்-ஆலுக்காஸ் கடையின் எட்டரை கோடி மதிப்பிலான நகைகளை மீட்டது எப்படி? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன  கொள்ளையடிக்கப்பட்ட ஒரு வாரத்தில், நகைகளை மீட்க வேலூர் மாவட்ட காவல்துறையினரின் எடுத்த அதிரடி மற்றும்  மின்னல் வேக செயல்பாடுகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேலூர் மாவட்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

டிசம்பர் 15ந்தேதி அன்று வேலூர்  தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் பின்புற சுவற்றை துளையிட்டு, சிங்கமுக மூகமூடி அணிந்த ஒரு நபர் கடைக்குள் புகுந்து, அங்குள்ள கேமராவில் ஸ்பிரேயர் அடித்து அதை மறைக்க முயற்சித்ததுடன், கடையினுள் இருந்து சுமார் 15 கிலோ தங்க நகை, 500 கிராம் வெள்ளி, பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக எட்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்தனர். 5 டிஎஸ்பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 போலீஸ்காரர்கள்  மற்றும்,  தடயவியல், சைபர் மற்றும் டெக்னிக்கல் அனலிட்டிக்ஸ் கொண்ட வேலூர் எஸ்பியின் கீழ் உள்ள குழுவினர், இந்த பணியில் ஓய்வு ஒழிவின்றி உழைத்தனர்.

கொள்ளை நடந்த போது அந்த பகுதியில் செயல்பட்டு  மொபைல் அழைப்புகள்,  ஜோஸ் ஆலுக்காஸ் கடை காமிரா உள்பட, அந்த பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி காமிராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஜெட் வேகத்தில் பணியாற்றியது. கொள்ள நடத்த அடுத்த 3 நாட்களுக்குள் 200 நகர கேமராக்களில் இருந்து 7 நாள் தரவுகளை பகுப்பாய்வு செய்தது. மேலும், கொள்ளை நடத்த நேரத்தில் செயல்பட்டு வந்த பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் , 234 மொபைல் போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்தே,  அணைக்கட்டு அருகே குச்சிப்பாளையத்தை சேர்ந்த டீக்காரமன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்  21 பேரிடம் 56 முறை நகை கடை கொள்ளை குறித்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், அவர் சிங்க முக முகமூடி அணிந்து கொள்ளையடித்ததும், கொள்ளையில், 20க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து மேலும் 15 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து,  கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மயானத்தில் புதைத்து வைத்துள்ளதும், கொள்ளையடிப்பதற்காக மூன்றுமாதம், மும்பைக்கு சென்று சிறப்பு பயிற்சி எடுத்து வந்ததும், இதற்காக விமானம் மூலம் மும்பை சென்று வந்ததும் தெரியவந்தது. பின்னர் கொள்ளையர்களுடன் சென்று, நகைகள் புதைத்து வைக்கப்பட்ட பகுதியான,  அணைக்கட்டு அருகே, குச்சிப்பாளையம் ஏரிக்கரையோரம் உள்ள மயானத்திற்கு சென்று, அங்கு புதைத்து வைத்திருந்த, 15 கிலோ தங்க நகைகள், 812 கிராம் வைர நகைகள், 100.5 கிராம் பிளாட்டின நகைகளை போலீசார் கைப்பற்றினர்.

காவல்துறையினரின் ஜெட் வேக நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையான அம்மை பிரியாணி  கடைக்காரர் வீட்டில் 250 சவரன் திருடிய வழக்கில், 2 பேரை ஆந்திராவில் கைது செய்த தனிப்படை போலீசார், 100 சவரன் நகைளை பறிமுதல் செய்தனர். அதுபோல, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையை யும் விரைந்தும், விரைவாகவும் பிடித்த செயல் பாராட்டப்பட்டு வருகிறது.