கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின்  ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்கவுள்ளார். இவர்  கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார்.

மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் மேற்குவங்கத்துக்கு புதிய ஆளுநரை குடியரசு தலைவர் நியமனம் செய்து உத்தரவிட்டார். அதனப்டி,  கேரளத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.வி.ஆனந்த போஸ் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் சி.வி.ஆனந்தபோஸ், இவர் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். மேற்குவங்க ஆளுநராக அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.ஆனந்த போஸ் கூறுகையில், ‘என் மீதுள்ள நம்பிக்கையில் இப்படி ஒரு பொறுப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேரள மக்களுக்கு நன்றி, கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும், மேற்குவங்க அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், தான்  அமைப்புக்குள் நின்று கொண்டு செயல்பட முயற்சி செய்வேன். மேற்குவங்க மக்களுக்கு பயன்படும் விஷயங்களை முன் நின்று நடத்த முயல்வேன். மேற்கு வங்கத்தில் மாநில அரசுடன் மோதும் எண்ணம் இல்லை என கூறினார்.