சென்னை: ஆட்சியர்களுடனான வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, சென்னையில்  மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க கெடு விதித்தும் உத்தரவிட்டு உள்ளார்.


வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிக்கால் அமைக்கும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும், தாமதாக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கவும், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து நீர் வழித் தடங்களிலும் ஆகாயத்தாமரைகளை அகற்றிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  அரசு துறைகளின் செயலர்களுக்கு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா எழுதியுள்ள கடிதத்தில், துறை செயலளர்கள்,  ஆட்சியர்களுடனான வாராந்திர ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாகவே, முக்கிய பொருண்மைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலர்கள், முதன்மைச் செயலர்கள் மற்றும் செயலர்கள் சார்பில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் பொருண்மைகள், அம்சங்கள் ஆகியன குறித்த குறிப்புகள் கூட்டம் நடைபெறும் நேரத்தின் போதுதான் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய விஷயங்கள் இனம் காணப்பட்டு, கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள், பொருண்மைகள் ஆகியனவும் சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு முன்னதாகவே கிடைக்கப் பெறுவதில்லை. காணொலிக் கூட்டம் நடைபெறும் போதுதான், காட்சி விளக்க முறையில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதனால் நேரம் அதிகமாக விரயமாகிறது. முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கவும், ஆய்வு செய்யவும் போதிய நேரம் கிடைப்பதில்லை.

எனவே, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெறும் சூழ்நிலையில், அதற்கு நான்கு நாள்களுக்கு முன்பாகவே, கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை ஆட்சியர்களுக்கு துறைகளின் கூடுதல் செயலர்கள், முதன்மைச் செயலர்கள் மற்றும் செயலர்கள் ஆகியோர் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்மூலம், வாராந்திர கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள போதுமான நேரம் கிடைக்கும்.

இவ்வாறு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.