டில்லி

டில்லியில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக டில்லியில் கொரோனா பரவல் அதிகமானது.  இதனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலானது.  தற்போது டில்லியில் பாதிப்பு குறைந்து வருகிறது.  டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டில்லியில் கொரோனா பாதிப்பு 10%க்கும் கீழ் சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையொட்டி டில்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  நேற்று கொரோனா பரவல் குறைந்ததையொட்டி டில்லி ஆளுநர், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.   ஆயினும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டில்லி அரசு அதிகாரிகள், “கொரோனா காரணமாக அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் திரையரங்குகள், பார்கள், உணவகங்கள் 50 சதவீதம் பேருடனும் செயல்படலாம். திருமணங்களில் 200 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.