சென்னை: திருமண மண்டபங்கள், உணவகங்கள், மால்கள் போன்றவை சுற்றுசூழல் விதிமுறை களை கடைபிடிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிகிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள உத்தரவின் அடிப்படையில், திருமண மண்டபங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், நெடுஞ்சாலை உணவகங்கள் மற்றும் விருந்து அரங்கங்கள், சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

நீர் பயன்பாட்டில் சிக்கனம், திட மற்றும் திரவ கழிவுகளை மேலாண்மை செய்தல், நீர், காற்று, சுற்றுச்சூழல், ஒலி மாசு விதிமுறைகளை கடைபிடித்தல், வாகனங்கள் நிறுத்துவதற்கான போதுமான இடவசதி மற்றும் டீசல் ஜெனரேட்டர்களின் சக்திக்கு தகுந்தவாறு உயரமான புகைபோக்கிகள் அமைத்தல் உள்பட  மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், செயல்பாட்டினை நிறுத்தி வைத்து, வழக்கு தொடரவும், இழப்பீட்டு தொகையினை வசூலிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.